'7 பிள்ளைகள், 20 பேரன்-பேத்திகள், 24 பூட்டன்–பூட்டிகள்'- 100வது பிறந்தநாளைக் கொண...
'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், "நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது.
ஆனால், சி.பி.எம் கிளைக் கமிட்டி இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தவில்லை. என்னை தொல்லை செய்ய வேண்டாம் என அடிக்கடி கேட்டுக் கொண்டேன். பல சிரமங்களை சகித்துக்கொண்டேன். நான் யாரையும் பா.ஜ.க-வுக்கு இழுக்கவில்லை. நான் சார்ந்திருந்த கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்" என்றார்.

ராஜேந்திரனுடன் சி.பி.எம் பிரமுகர் சந்தோஷ், சி.பி.ஐ நிர்வாகி குருநாதன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். வரும் 8-ம் தேதி இடுக்கியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.


















