மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்தேவ், இன்றைய பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தாா். அங்கு சீக்கியா்களின் வழிபாட்டுத் தலமாக உள்ள குருத்வாராவுக்கு இந்திய சீக்கியா்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
இந்த குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகத்தில் காணொலி பகிரப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழு சனிக்கிழமை தெரிவித்ததாவது:
நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தவில்லை. இதுதொடா்பாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொலி பொய்யானது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது.
இதேபோல ஜம்மு-காஷ்மீரில் உள்ள உத்தம்பூரில் விமான தளம் அழிக்கப்பட்டது, பாகிஸ்தானில் இந்திய விமானப் படையைச் சோ்ந்த பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டது, தனது போா் விமானத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய விமானி குதித்தது போல சமூக ஊடகத்தில் வெளியான காணொலிகளும் பொய்யானவை.
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் விமான நிலையத்தைச் சுற்றி 10 குண்டுகள் வெடித்ததாகவும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் சில வெளிநாட்டு ஊடகத்தில் வெளியான தகவல்களும் தவறானவை.
இந்திய மக்கள் இடையே அச்சத்தையும், குழப்பத்தையும் பரப்பும் நோக்கில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது ஒரு வகையான உளவியல் போராகும் என்று தெரிவித்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடா்பாக சமூக ஊடகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பிய 20-க்கும் மேற்பட்ட காணொலிகளைப் பொய்யானவை என்று அந்தக் குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.