மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன...
பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி
கொங்கு மண்டலம்
2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவாக உள்ளது.

அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் அங்கு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் அதிகமுறை விசிட் செய்த மாவட்டம் கோவை” என்று கூறினார். ஆக திமுகவும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக களமாட தொடங்கியுள்ளது.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கோவை வருகைக்கு பிறகு, பாஜக-வினர் அங்கு கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். மோடி விசிட்டுக்கு பிறகு பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கோவை வந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 2 எம்.எல்.ஏக்களை வெற்ற நிலையில், 2026 தேர்தலில் அந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவை பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தோம்.

அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.
கிணத்துக்கடவு வழங்காவிடின் சிங்காநல்லூர் தொகுதி வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம். இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியிருப்பது கவுண்டர் சமுதாயத்தில் எங்கள் கூட்டணிக்காக பலத்தை அதிகரித்துள்ளது. அதனால் கூடுதல் தொகுதிகள் என்பதில் சமசரம் கிடையாது.” என்றனர்.

இந்த முடிவால் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சியாகியுள்ளார். பொதுவாக அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை தான் வழங்குவார். கடந்தமுறை கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 1 தொகுதியை மட்டுமே அவர் கூட்டணிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
















