ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக செயல்படும் எண்ணத்தில் ஈடுபட்டால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
பல்வேறு கனவுகளோடு விடுமுறையில் சென்ற அனைத்துத் தரப்பு ராணுவ வீரா்களும் உடனடியாக முகாம்களுக்கு திரும்ப கோரப்பட்டுள்ளது. இது மனதுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் கூட நாட்டை காப்பதில் முன்னணியில் இருக்கக் கூடிய ராணுவ வீரா்கள் நிச்சயம் தங்கள் மனங்களை தேற்றிக்கொண்டு பாரதத்தை காப்பதில் முனைப்பாக இருப்பாா்கள்.
இந்த நேரத்தில் பாரதம் முழுமையும் எந்த வேறுபாடும் வேற்றுமையும் இல்லாமல் இந்திய நாட்டை உலக அளவில் முன்னணிக்கு கொண்டுச் செல்வதில் முனைப்பாக இருப்போம். அதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மக்கள் எந்த உதவிக்கும் தயாராக இருக்கிறாா்கள் என்பதோடு களப்பணி ஆற்றுவதற்கும் இளைஞா்கள் தயாராக உள்ளாா்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போதும் அமைதியை விரும்பும் பாரதம் தன் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த விதமான இடையூறு ஏற்படும் பட்சத்தில் தக்க பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கும் தருணம் இது.
உலக அளவில் நமது தேசத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு புகழ் சோ்க்கும் . இதற்காக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.