Vikatan Signature Campaign: பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் IAS மச்சேந்திரநாதனே...
பிரபலங்களுடன் போட்டோ; ஃபோர்ஜெரி பணத்தில் எம்.எல்.ஏ ஆக பிளான் - புதுச்சேரி தொடர் குற்றவாளி கைது!
`நம்மவரின் செல்லக்குட்டி...’
புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் சில லட்சங்களை செலவு செய்து இலவசங்கள் கொடுத்தால் போதும், அங்கு ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுவிட முடியும். கடந்த இருபது ஆண்டுக்கால புதுச்சேரி அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மையை நம்மால் உணர முடியும்.
அந்த வரிசையில் தேர்தலை சந்திக்க திட்டமிட்ட விக்கி (எ) ராஜகணபதி என்பவரைத்தான் காரைக்கால் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து அதன் பிறகு பா.ஜ.க-வில் இணைந்தவர் நமச்சிவாயம்.
அவரது ஆதரவாளர்கள் நம்மவர் என்றே அழைப்பார்கள். 2021 தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் நமச்சிவாயம்.

அப்போது புதுச்சேரியில் திரும்பிய பக்கமெல்லாம் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வாழ்த்து சொல்லும் பேனர்கள் வரிசைகட்டி நின்றன. அந்த பேனர்களில் அமைச்சரைவிட அதிகமாக கவனம் பெற்றவர், அதை வைத்த விக்கி (எ) ராஜகணபதிதான்.
அதற்கு காரணம் `நம்மவரின் செல்லக்குட்டி விக்கி' என்ற அடைமொழியுடன் அந்த பேனர்கள் சிரித்துக் கொண்டிருந்ததுதான். உள்துறை அமைச்சரின் செல்லக்குட்டியாக அடையாளப்படுத்திக் கொண்டு, பா.ஜ.க துண்டை அணிந்து கெத்தாக வலம் வந்த விக்கியைப் பார்த்து வாயடைத்து நின்றார்கள் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள்.
அதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாக, பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களே கொஞ்சம் `ஜெர்க்' ஆகித்தான் போனார்கள்.
`இனிமேல் யாரையும் ஏமாற்ற மாட்டேன்...’
அதற்கடுத்த சில நாள்களில் காரைக்காலில் புதிதாக தொடங்கப்பட்ட ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி பணி ஆணை மற்றும் அடையாள அட்டைகள் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த ஒரு நபரை புரட்டி எடுத்தனர் அப்பகுதி மக்கள்.
காரணம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஜிப்மரின் பணியாணை மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்ற அந்த மக்கள், தங்களுக்கு ஜிப்மரில் வேலை கிடைத்துவிட்டதாகவே நம்பிவிட்டார்கள்.
அதன்பிறகு அந்த நபரை, `இனிமேல் யாரிடமும் ஏமாற்றிப் பணம் பறிக்க மாட்டேன்' என்று பேச வைத்து வீடியோ எடுத்தனர். அழுது கொண்டே மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த நபர் வேறு யாருமில்லை... அமைச்சரின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக் கொண்ட விக்கி (எ) ராஜகணபதியே.

அவர் கொடுத்த போலிப் பணி ஆணைகள், அடையாள அட்டைகள் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் அப்போது எந்த காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்குப் பதிவாகவில்லை.
அதுகுறித்து அப்போது போலீஸாரிடம் கேட்டபோது, `அவர் மீது யாரும் புகாரளிக்கவில்லை. அதனால் வழக்குப் பதிவு செய்யவில்லை' என்றனர்.
அதையடுத்து 2023-ம் ஆண்டு நில மோசடி வழக்கில் அரியாங்குப்பம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவரை, ஜெயக்கொடி என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜிப்மர் போலி பணி ஆணை மோசடி வழக்கில் கைதுசெய்தனர் கோரிமேடு போலீஸார். அதுவரை விக்கி கொடுத்த அலப்பறைகளுக்கு அமைதியாக இருந்த பா.ஜ.க தரப்பு, அவருக்கும் தங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை வெளியிட்டது.
மோசடிப் பணத்தில் நலத்திட்ட நாயகனாக வலம்
அப்போது அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இருக்கும் புகைப்படமும் சமூக ஊடகங்களில் `ட்ரோல்' மெட்டீரியலாக மாறியது. அதையடுத்து வெளியில் வந்த விக்கி, `அமைச்சர் நமச்சிவாயத்திற்காக நான் தீக்குளிப்பேன்' என்று ஸ்டன்ட் அடித்தார்.
அத்துடன் இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இந்த நிலையில்தான் கடந்த 2025 ஜூலை மாதம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள், ஜிப்மர் மருத்துவமனை பெயரில் தங்களை ஏமாற்றிவிட்டதாக நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விக்கி, ஜானகிராமன், காயத்ரி, நீலமேகம் உள்ளிட்டவர்களை கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

அதையடுத்து மீண்டும் ஜாமீனில் வந்த விக்கி, அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறி நலத்திட்டங்களை (!?) வழங்கி வந்தார். இதற்கிடையில், `நலத்திட்டங்கள் வழங்குவது போல போட்டோக்கள்தான் எடுக்கிறார்.
ஆனால் எந்தவித உதவியையும் அவர் செய்யவில்லை' என்று சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், `ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக விக்கி என்னிடம் நான்கு லட்சம் ரூபாய் வாங்கினார்.
அவர் கொடுத்த பணி ஆணை மற்றும் அடையாள அட்டையுடன் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், அது போலி என்று தெரிய வந்தது. அதனால் விக்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பரணிதரன் என்பவர், காரைக்கால் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
கோடிக்கணக்கில் சுருட்டிய குற்றவாளிகள்
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கோட்டுச்சேரி போலீஸார், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இரவு அவரை `நன்றாக கவனித்து' தூக்கியிருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டுச்சேரி காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள், ``காரைக்கால் தேவனூர்சாலையைச் சேர்ந்த நீலமேகம் என்பவரும் விக்கி என்ற ராஜகணபதியும் நண்பர்கள்.
காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் செக்யூரிட்டி தொடங்கி செவிலியர் பணிகள் வரை வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 140 பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு ஜிப்மர் பெயரில் போலி பணி ஆணைகளையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஜாலியாக செலவழித்துக் கொண்டு, அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து போட்டோ எடுப்பார்கள்.

அந்தப் போட்டோவை காட்டி, `பாத்தீங்களா… எல்லார்கிட்டையும் பேசிட்டோம். உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்' என்று தவணை முறையில் பாக்கித் தொகையையும் வசூலித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் வேலைக்காக முயற்சிப்பவர்களை புதுச்சேரியில் ஓர் இடத்திற்கு வரவழைத்து, நீலமேகத்தை ஜிப்மர் மருத்துவமனையின் உயரதிகாரி என்று கூறி மீட்டிங் போட்டெல்லாம் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தைத்தான் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சிலருக்கு வழங்கியிருக்கிறார்கள். தற்போது எம்.எல்.ஏ கனவுடன் சுற்றிய விக்கி என்ற ராஜகணபதியைக் கைது செய்துவிட்டோம்.
அவரது நண்பர் நீலமேகத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். சில கட்சிகளுக்கு தேர்தல் நிதிகூட கொடுத்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு லட்சம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் விக்கி" என்றனர் விரிவாக.
இவர்கள் ஏமாற்றியது குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் படித்தவர்களையும், தகுதியானவர்களையும் தங்களின் பணபலத்தால் பின்னுக்குத் தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் அரசு வேலையை அடையை நினைத்து ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது ?














