வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
பிரபலமாகும் ``Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?
நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonely Deaths) பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளன.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவில் "சி-லே-மா" (Si Le Ma - Are you dead?) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். "நீங்கள் இறந்துவிட்டீர்களா?" என்று நேரடியாகப் பொருள் தரும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026-ம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை 'அவசரத் தொடர்பு' (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும். பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடும்.
சீனாவில் மிகவும் பிரபலமான "ஈ-லே-மா" (உங்களுக்குப் பசிக்கிறதா?) என்ற உணவு விநியோகச் செயலியின் பெயரைப் போலவே, "சி-லே-மா" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் என இதன் உருவாக்குநர்களில் ஒருவரான லியூ தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சுமார் 1.15 டாலர் (சுமார் 8 யுவான்) கட்டணத்தில் கிடைக்கிறது.

ஒரு வருடத்தைக்கூட நிறைவு செய்யாத இந்தச் செயலி, சீனாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்குக் காரணம், அங்கு அதிகரித்து வரும் தனிமைதான் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்ணியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்பதற்கு இந்தச் செயலி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்றப் பாராட்டும் பெற்றிருக்கிறது.















