State Awards: "ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில!" - குழந்தை...
புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது.

இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது.
இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது" என்றனர்.
தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது.
அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.














