விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
"அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது!" - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்
இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன்.
'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'பராசக்தி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'பாயின்ட் ஆஃப் வியூ' தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம்.

நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், "தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்.
மும்பையில் எனக்கு வீடு இருந்தது, அதனால் பாலிவுட்டில் நீண்ட வருடங்கள் பணி புரிந்தேன். அங்கிருக்கும் அத்தனை பெரிய இயக்குநர்களுடனும் நான் பணிபுரிந்துவிட்டேன்.
இப்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற 'துரந்தர்' பட இயக்குநர் ஆதித்ய தர் இயக்கவிருந்த முதல் படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது.
ஆனால், அப்போது மிஸ் ஆகிவிட்டது." என்றவர், "நானும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒன்றாக இங்கு சென்னையில் வாக்கிங் போவோம்.
அப்போதே நாங்கள் இணைந்து பணிபுரியும் திட்டங்கள் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். ஒரு நாள் ஆமீர் கானின் 'ஃபனா' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர் என்னிடம், 'கஜினி' திரைப்படத்தை என்னை இந்தியில் ரீமேக் செய்யச் சொல்கிறார்கள் என்றார்.
தமிழ் பதிப்பை எடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸே இப்படத்தை இயக்குகிறார். நீங்கள்தான் அதற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது நான் ரீமேக் அதிகமாக செய்துவிட்டேன். மீண்டும் ரீமேக் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன்.

அமீர் கான் என்னை சமாதானம் செய்து என்னை பணிபுரியச் சொன்னார். அப்படிதான் முருகதாஸுடன் பயணம் அமைந்தது. அவர் இயக்குநராக இருந்தது எனக்கு வேலைகளையும் எளிதாக்கியது.
பிறகு நானும் முருகதாஸும் 'ஏழாம் அறிவு' படத்தில் இணைந்தோம். சொல்லப்போனால் எங்கள் மூவருக்குள் ஒரு ட்ரிவியா இருக்கிறது. நான் 'சிட்டிசன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கமிட்டானேன்.
அப்படியான வேளையில், அமீர் கான் நடிக்கும் மற்றொரு படத்திற்கும் நான் ஒளிப்பதிவு செய்ய கமிட்டாகி இருந்தேன்.
அஜித்திடம் 6 மாதங்களுக்கு நானிங்கு இருக்கமாட்டேன் எனவும் சொல்லிவிட்டேன். அவர் 'நீங்கள் சென்று வாருங்கள். வந்த பிறகு நாம் படப்பிடிப்பு வைத்துக் கொள்வோம். அதற்கிடையில் நான் மற்றொரு இயக்குநருக்கு தேதி கொடுத்துவிடுகிறேன்.' என்றார்.
அப்படி அந்த 6 மாதங்களில் உருவான படம்தான் முருகதாஸ் இயக்கிய 'தீனா' திரைப்படம். 'ஆய்த எழுத்து' படத்திற்குப் பிறகு முழுமையாக இந்தியில் பணிபுரிந்து வந்தேன்.
என்னுடைய மூத்த மகனை கண்டித்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னை வர முடிவு செய்தேன். அப்படியான நேரத்தில்தான் 'ஏழாம் அறிவு' பட வாய்ப்பு வந்தது.
பாலிவுட்டில் 'டான்' படத்திற்காக வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டேன்." என்றார்.

"அப்படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடித்திருந்த 'ஆதித்ய வர்மா' படத்திற்குதான் வந்திருந்தீர்களே..." என எழுப்பிய கேள்விக்கு, "முதலில் என்னை அந்தப் படத்தை டைரக்ட் செய்ய சொல்லியிருந்தார்கள்.
பாலா சார் ஏற்கெனவே அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். மீண்டும் நான் வந்து இயக்குவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்துவிட்டேன். நான் பாலா சார் மீது பெரும் மதிப்பும் வைத்திருக்கிறேன்." எனப் பேசினார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.















