"நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்"- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து...
`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!
``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?" எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அவற்றின் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனை என்று கூறுவது நகைமுரணின் உச்சம் ஆகும்.
என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் நேற்று நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டும் என்றால் அது திமுக என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஊழலுக்கும், திமுகவுக்கும் பிரிக்க முடியாத பந்தம். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன.
திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது; இவற்றின் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் கூறி இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
1. ரூ.888 கோடி பணி நியமன ஊழல்
2. ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி
3. ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல்
4. ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல்
5. ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல்
6. ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல்
7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல்
8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல்
9. ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்
10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்
மேற்கண்ட 10 ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. இவற்றில் முதல் நான்கு ஊழல்களுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை வினா எழுப்பியது.
ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, தொடக்கக்கட்ட விசாரணை 180 நாள்களுக்கு நடத்தப்படும் என்றும், அதன் பிறகு தான் வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் கூறி வழக்குப் பதிவு செய்யாமல் திமுக அரசு தாமதித்து வருகிறது. இப்படியாக ஊழலை போற்றிப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறார்.

ரூ. 1.82 லட்சம் கோடி மது வரி ஏய்ப்பு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக திமுக ஆட்சியில் முதலில் நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தான் 15.03.2022ஆம் நாள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் குற்றஞ்சாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வில்லை. அப்படிப்பட்டவர் ஊழலுக்கும், தமக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது வினோதமாக உள்ளது.
ஊழல் செய்வதில் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்களை சட்டவிரோதமாக காப்பாற்றுவதிலும் திமுக அரசு தான் முன்னணியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் சட்டவிரோதமாக விசாரணை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தீர்ப்பளித்தது. திமுகவினர் ஊழல் செய்வதிலும், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதிலும் வல்லவர்கள் என்பதற்கு இதுவே சான்று.
திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்களை மட்டுமின்றி, பிற கட்சிகளில் ஊழல் செய்தவர்களையும் சலவை செய்து காப்பாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்பதற்கு அந்தக் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கும், வைத்திலிங்கத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் தான் சான்று ஆகும்.

இன்றளவும் விஞ்ஞான ஊழலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக, தங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது அவல நகைச்சுவையாகும். திமுக ஊழலே செய்யவில்லை என்றால், அதன் மீதான ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதன் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இதைச் செய்ய திமுக அரசு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















