Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.!" - வெற்றி விழாவில் சீமான்
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தம்பி ஜீவா ஒரு முழுமையான கலைஞர். நடனம், சண்டைக்காட்சி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனித்திறமை கொண்டவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே அவருக்குப் பெரிய வெற்றி அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் சிறப்பான கதையை கொடுத்திருக்கிறார். பெரிய பொருள் செலவு இல்லாமல், நல்ல கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். 'டூரிஸ்ட் ஃபேமிலி', விக்ரம் பிரபு நடித்த 'சிறை' போன்ற படங்கள் இதற்குச் சான்று.
நல்ல கதைகள் இருந்தால் யார் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள். எனது தந்தை ஆர்.பி. சவுத்ரி போன்ற ஜாம்பவான்கள் இப்போது படம் எடுக்காமல் இருப்பது வருத்தமாக இருந்தாலும், அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய கண்ணன் ரவி போன்ற தயாரிப்பாளர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஒரே நேரத்தில் 20 படங்களைத் தயாரிப்பதன் மூலம் 20 இயக்குநர்களுக்கு அவர் வாழ்வாதாரம் வழங்கியுள்ளார். நல்ல கதைக்கும் நல்ல தயாரிப்பாளருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் இப்போது அந்த முரண் மறைந்து இரண்டும் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி.
படத்தின் வெற்றிக்கு உழைத்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் எனது வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்திற்கு 'தலைவர் தம்பி' எனப் பெயரிட்டது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பொதுவாக என்னை அனைவரும் 'தலைவர் தம்பி' என்றுதான் அழைப்பார்கள். தலைப்பு தமிழில் இல்லாதது(TTT) வருத்தமாக இருந்தாலும், அந்தப் பெயர் எனக்கு மிகவும் நெருக்கமானது. வெற்றி என்பது வெறும் மூன்றெழுத்து அல்ல, அது பலருடைய வாழ்க்கை. இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள்" என்றார்.














