Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமை வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி குறித்தும் கேள்வி எழுந்தது. ஆனால் இப்போது அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவியேற்க இருக்கிறார். கணவர் இறந்த மூன்றாவது நாளில் இதற்காக சுனேத்ரா பவார் தன்னுடைய மகனோடு மும்பைக்குக் கிளம்பி போய் இருக்கிறார்.
மும்பையில் இன்று நடக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்றே துணை முதல்வராகவும் பதவியேற்க இருக்கிறார்.

அதேசமயம் இது குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவாரிடம் சுனேத்ரா பவார் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சரத் பவார் அதிருப்தியடைந்துள்ளார்.
சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்க இருப்பது குறித்து இன்று சரத் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராகப் பதவியேற்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. பத்திரிகை செய்திகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவர் இது குறித்து எங்களிடமோ அல்லது குடும்பத்திலோ கலந்து ஆலோசிக்கவில்லை. அவர்களது கட்சியில் மூத்த தலைவர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே போன்றோர் இருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்பது அஜித் பவாரின் விருப்பமாக இருந்தது. அவருடைய அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். அஜித் பவார் மற்றும் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் சாதகமான ஒன்றாக இருந்தது.
பிப்ரவரி 12-ம் தேதி இந்த இணைப்பு குறித்து அறிவிக்க அஜித் பவார் விரும்பினார். இது அவருடைய விருப்பமாக இருந்தது" என்று கூறினார். அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான சில கட்சித் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவேதான் பா.ஜ.க-விடம் பேசி அவசர அவசரமாக சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் சரத் பவார் அல்லது அவர் மகள் சுப்ரியா சுலே பங்கேற்பார்களா என்றும் தெரியவில்லை.













