செய்திகள் :

2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03

post image

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசும்போது, ``நான்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார்" என்றார். அதெப்படி நான்கு தொகுதிகளில் போட்டியிட முடியுமென்று பலருக்கும் கேள்வி எழுந்தது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி தொடுத்த, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பில்லை என்று சிலர் ஆரூடம் சொல்கிறார்கள்.

ஒருவேளை அப்படியொரு நிகழ்வு நடந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புண்டு.

தமிழ்நாட்டு அரசியலில் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பு செய்யாமல் தேர்தலை சந்தித்தாலும், கட்சித் தலைமை, கூட்டணித் தலைமை யார் என்பதை வைத்து மக்களே தீர்மானித்து விடுவார்கள். அதுவும் காங்கிரஸ் காலத்திற்குப் பின்னர், திமுக, அதிமுக தலைவர்களே முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்கள்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

ஆனால், 2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பல்வேறு அரசியல் ஆடுபுலி ஆட்டங்களை சந்தித்தது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா கைது, கருணாநிதி கைது என்று தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கும் பின்புமாக அன்றைய அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. 

1996ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கப் போகிறேன் என்றார். அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தனர். அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த இரா.நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், எஸ்.கண்ணப்பன் (ராஜகண்ணப்பன்), டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். துறைச் செயலாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சிறைக்குச் சென்றார்கள். 1996 ஜூன் 20ஆம் நாள் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா கைது

ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி வாங்கியது, டான்சி நிலபேரம், கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பரம், நிலக்கரி இறக்குமதி, அந்நிய செலவாணி சட்டத்தை மீறி மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பெற்றது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு ஆகிய ஏழு வழக்குகள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டது.

ஏழு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி, தனித்தனியாக முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், செசன்ஸ் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆனது. 1996 டிசம்பர் 6 அன்று ஏழு வழக்கிலும் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனே, மறுநாள் டிசம்பர் 7 அன்று காலை சுமார் 9.50 மணிக்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

ஜெயலலிதா

ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதில் ரூ 8.53 கோடி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான ஜெயலலிதாவிற்கு சிறையில் 2529 என்ற எண் வழங்கப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா கைதாகும் போது தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்கள் கொந்தளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதானார்கள். 

28 நாட்கள் சிறையில் இருந்தார் ஜெயலலிதா. தான் கைது செய்யப்படும்போது, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதா, கூடியிருந்த செய்தியாளர்களிடம் “நாளை நமதே” என்றார். சிறை சென்று திரும்பியதும் அடுத்து வந்த தேர்தலில் அதனை சாதித்தும் காட்டினார். 

ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்தது.

அடுத்தடுத்த வழக்குகள்

1991 இல் அதிமுக ஆட்சியில் இருந்த போது, சென்னை கிண்டியில் உள்ள அரசு நிறுவனமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேசன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஜெயலலிதா, சசிகலாவை பங்குதாரர்களாகக் கொண்ட, இந்நிறுவனங்கள் ரூ.4.16 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்ற வழக்கும் அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்கில், 2000ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா இருவரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி ஐந்தாண்டுகள் முழுமையாக முதலமைச்சர் பதவியை நிறைவு செய்தார் திமுக தலைவர் கருணாநிதி.

ஜெயலலிதா

2001 மே 10 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரைகள் தொடங்கின.

2001 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 - பிரிவு 33(7) ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கிறது. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை. அதனை மீறித்தான் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு அளித்திருந்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2827 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையில் ஜெயலலிதாவின் நான்கு மனுக்கள் உள்பட 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கருணாநிதி செய்த சூழ்ச்சியால் தனது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் ஜெயலலிதா.

யார் முதல்வர்?

அதிமுக வெற்றி பெற்றால் யார் முதலமைச்சராக முடியும்? உங்களால் சொல்ல முடியுமா? என்று தேர்தல் பரப்புரையில் அதிமுக அணியை நோக்கி கருணாநிதி கேள்வி எழுப்பினார். 

கூட்டணி கணக்குகள் அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் முடிவுகளில், அதிமுக அணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடியான, கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசு 21,773 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆண்டிபட்டி தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் 25,009 வாக்குகள் வித்தியாசத்திலும், புதுக்கோட்டை தொகுதியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 28,183 வாக்குகள் வித்தியாசத்திலும், புவனகிரி தொகுதியில் அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்  பி.எஸ்.அருள் வாழைப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 3,764 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். 

தேர்தலில் போட்டியிடாத, சட்டமன்ற உறுப்பினர் இல்லாத, செல்வி ஜெ.ஜெயலலிதா அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

ஜெயலலிதா

ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்தித்து, தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. மத்தியில் திமுக கூட்டணியோடு பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சட்டவல்லுநர்கள் ஜெயலலிதா பதவியேற்க முடியுமா என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, அதிமுக அமைச்சரவை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2001 மே 14 அன்று மாலை செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பொன்னையன், தம்பிதுரை, டி.ஜெயக்குமார், அய்யாறு வாண்டையார், ஆர்.சரோஜா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஓரிரு நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்தது.

ஆனால், 2001 மே 14 முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ஜூன் 31 நள்ளிரவில் சென்னை மேம்பால கட்டுமான ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி கைது

இந்த அரசியல் பரபரப்பு அடங்கும் முன்பாக, ஜெயலலிதா மீதான பதவியேற்பு  வழக்கில் 2001 செப்டம்பர் 21 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பரூச்சா தலைமையில், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், ரூமாபால், ஜி.பி.பட்நாயக், பிரிஜேஷ் குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.

அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொன்னையன், காளிமுத்து, தம்பிதுரை, ஜெயக்குமார், தனபால், சரோஜா உட்பட பலரது பெயர்களையும் பத்திரிகையாளர்கள் அசைபோட்டார்கள். நாவலர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, சசிகலா அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசி ஆகியோரையும் முதலமைச்சர் போட்டியில் கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு அதிமுக தலைமைக் கழகம் வந்தார் ஜெயலலிதா. முறைப்படி அறிவிப்பு செய்தார். 

அதிமுகவில் சேடப்பட்டி முத்தையா சீடராக வளர்ந்து, பெரியகுளம் சேர்மனாக பதவி வகித்து, கம்பம் செல்வேந்திரன், பெரியவீரன் துணையோடு, டிடிவி தினகரன் ஆதரவாளராகத் தொடர்ந்து, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2001 செப்டம்பர் 21 இரவு சுமார் 8.20 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்… ஆளுநர் மாளிகையில் முறைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அங்கு கிங் மேக்கர் ஆனார் டிடிவி தினகரன்.!

(ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 

Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live

27 ஆண்டுகளுக்குப் பிறகு!27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த ... மேலும் பார்க்க

`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்' ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்த... மேலும் பார்க்க

நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உண... மேலும் பார்க்க

MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த' அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர... மேலும் பார்க்க

"மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!"- கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார். இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், " அன்பு ஒரு ப... மேலும் பார்க்க

`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமை வகித்த தேசியவாத காங்கி... மேலும் பார்க்க