Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன் டாக்!
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, ``ஆரம்ப காலத்தில் ஆர்.பி. சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால், யார் ஹீரோ எனக் கேட்பார். ஜீவா ஹீரோ என்றால்... ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது, வேற யாரையாவது சொல்லுங்க' என்று விளையாட்டாகச் சொல்வார். ஆனால், அப்படி வளர்ந்த ஜீவா இன்று ஒரு தயாரிப்பாளருக்குத் தேவையான மிகச்சிறந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்.
காலையில் சொன்ன நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். தயாரிப்பாளருக்குச் சுமை தராத இப்படிப்பட்ட ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே உள்ளனர். அதனால்தான் ஜீவாவின் வெற்றியை ஒரு சக நடிகனாக நான் அதிகம் ரசிக்கிறேன். நாங்கள் மாலை 6 மணிக்குச் சென்று காலை 6 மணி வரை ஷூட்டிங் இருக்கும். ஆனால், அங்கிருந்த உதவி இயக்குநர்களும், செட் அசிஸ்டென்ட்களும் நள்ளிரவு 2 மணிக்கே வந்து செம்பருத்தி பூக்கள் நடுவது உள்ளிட்ட வேலைகளைத் தயார் செய்வார்கள்.
அந்தப் பிள்ளைகளின் உழைப்புதான் இன்று வெற்றியாக மாறியிருக்கிறது. அவர்களின் திசை நோக்கி நான் இருகரம் கூப்பி வணங்குகிறேன். 2026-ல் இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற பயத்தில் இருந்தோம். திடீரென ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. மதுரையில் காலைக் காட்சியில் கூட்டம் குறைவாக இருந்த செய்தி கேட்டு வருத்தமாக இருந்தது. ஆனால், மாலைக் காட்சி 'ஹவுஸ் ஃபுல்' ஆனபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது.
துபாயில் ஆடியோ வெளியீட்டு விழா என்றதும் வியப்பாக இருந்தது. ஆனால், அங்கு அவர் எங்களுக்கு அளித்த மரியாதை மற்றும் விருந்தோம்பலைப் பார்த்து எனக்குக் கூச்சமாகவே ஆகிவிட்டது. அவ்வளவு அன்பான மனிதர் அவர். அவரும், தீபக்கும் இணைந்து தமிழ் சினிமாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய அரங்கில் ஒரு வெற்றி விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி." எனக் குறிப்பிட்டார்.














