"அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது!" - ரவி கே சந்திரன...
நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், "இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது.

கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை" என்று மனம் நொந்தனர்.
இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு,
“எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது. ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்று கூறினார்.













