"தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்கிய கலைஞன் சலிம்குமார்"- வி.டி.சதீசன், பினராய...
புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! - அதிரடி காட்டிய பெண் நீதிபதி
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த முனுசாமிக்கு தற்போதைய வயது 84. இவருக்கு வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் என மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
திருப்பட்டினம் பகுதியில் வசித்துவரும் அவர்கள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட எந்தவித பராமரிப்பையும் செய்யாமல் பல ஆண்டுகளாக தந்தை முனுசாமியை தனித்து விட்டிருக்கின்றனர். அதில் விரக்தியடைந்த முனுசாமி கடந்த 2018-ம் ஆண்டு, `வயதான என்னிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்ட என் மகன்கள், என்னைப் பராமரிக்காமல் ஒதுக்கிவிட்டனர்.
வயதான எனக்கு சாப்பிடக் கூட வழியில்லை. மூன்று மகன்களில் ஒருவர் கூட சாப்பாடு கொடுப்பதில்லை' என்று காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதியவர் முனுசாமியின் மனுவை ஏற்ற அப்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதியும், துணை ஆட்சியருமான ஆதர்ஷ், அந்த மனு மீது விசாரணை செய்தார்.
அதில், முனுசாமியின் மூன்று மகன்களும் அவரை பராமரிக்காமல் விட்டது தெரிய வந்தது. அதனால், மூன்று மகன்களும் மாதம்தோறும் முனுசாமிக்குத் தலா ரூ.2,000 வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார் துணை ஆட்சியர் ஆதர்ஷ்.
அப்போது அதற்கு ஒப்புக் கொண்ட முனுசாமியின் மூன்று மகன்களும், அதன் பிறகு அந்த பராமரிப்புத் தொகையை வழங்க முடியாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முனுசாமியின் மகன்களில் ஒருவரான திருமுருகன் மேல் முறையீடு செய்தார். ஆனால் அங்கும் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். தொடர்ந்து மற்றொரு மகனான மீனாட்சி சுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
ஆனால் தற்போதுவரை அந்த மனு மீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், `சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டும், 2018 முதல் 2026 வரை என் மகன்கள் எனக்கு எந்தவித பராமரிப்புத் தொகையையும் வழங்கவில்லை' என்று சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார் முதியவர் முனுசாமி.
அவரின் மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட துணை ஆட்சியருமான பூஜா, மூன்று மகன்களையும் `லெஃப்ட் ரைட்' வாங்கினார்.

தொடர்ந்து, `71 மாதங்களுக்கான பராமரிப்புத் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தியதற்கும், நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததற்காகவும் மூவரையும் கைது செய்யுங்கள்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட முனுசாமியின் மூன்று மகன்களும், கடந்த 5-ம் தேதி நீதிபதி பூஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி பராமரிப்புத் தொகை வழங்காததால் மூவருக்கு தலா ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பராமரிப்புத் தொகையை வழங்கும் வரை மூன்று பேரும் சிறையில் இருக்க வேண்டும். அதன்பிறகு மாதம் தவறாமல் முதியவர் முனுசாமிக்கு பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் மூன்று பேரும் காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர்.















