செய்திகள் :

புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா

post image

`எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வெட்டுவேன்...’

புதுச்சேரி, தமிழகத்தின் பிரபல தாதாவான `தட்டாஞ்சாவடி’ செந்தில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதேபோல 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காலாப்பட்டு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே தற்போது காலாப்பட்டு தொகுதியை குறி வைத்திருக்கின்றனர்.

கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ``புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளி ரௌடிகள், காலாப்பட்டு பகுதியிலுள்ள மூன்று தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து வேலை கேட்கிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள்.

தொழிற்சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்ற முறையிலும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவம்பர் 13-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறேன்.

பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வெளியிட்ட வீடியோ காட்சி. மாஸ்க் அணிந்திருப்பவர் தட்டாஞ்சாவடி செந்தில்

ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யூனியன் தலைவர்கள் அனைவரும் ஹெச்.ஆர்-களுக்கு பெண்களை சப்ளை செய்வதாகக் கூறி, எங்கள் காலாப்பட்டு தொகுதிப் பெண் சகோதரிகளையும், தாய்மார்களையும் இழிவாகப் பேசியிருக்கிறார்கள்.

மேலும், `எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், ஜி.எம்-மாக இருந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அந்தக் கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்தேன்.

காவல்துறை அதை செய்யாததால், தற்போது துணைநிலை ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறேன். 2011 முதல் 2016 வரை காலாப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். அப்போது தொகுதியில் ஒரு கொலை கூட நடந்தது கிடையாது.

`ஒன்பது கொலைகளை செய்தவர் செந்தில்’

அதற்கடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரும் கொலை செய்யப்பட்டார்கள். தற்போது தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டிய, ஒன்பது கொலைகளை செய்த குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் மீதுதான் புகாரளித்திருக்கிறேன்.

அவருடன் 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளிகள் இருந்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

அதையடுத்து அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளையின் தலைவருமான செந்தில், ``மக்களுடன் நான் அந்த தொழிற்சாலைக்குச் சென்றது உண்மைதான். காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டோம்.

அப்போது தொழிற்சாலை நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தையை, முத்து என்ற ஐ.ஆர்.பி.என் காவலர் சிவில் உடையில் வந்து வீடியோ எடுத்தார். அப்போது `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்ட எங்கள் ஆதரவாளர்கள் இருவரை, முத்து தாக்கினார்.

அதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.ஆர்.பி.என் பிரிவிலும் முத்து மீது புகார் தெரிவித்திருக்கிறோம். இதுதான் தொழிற்சாலையில் நடந்த விவகாரம்.

`அமைச்சராக இருந்தபோதே தலைமறைவானவர் கல்யாணசுந்தரம்’

ஆனால் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோற்றுவிடுவார் என்ற பயத்தில்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல பெண்களைப் பற்றி நான் தவறாக பேசுவதாக கூறியிருக்கிறார். எந்த சூழலிலும் நான் அப்படிப் பேசியதில்லை. பிள்ளைச்சாவடி பகுதியில் கட்டப்பட்டு வரும் விநாயகர் கோயிலுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்று நாங்கள் கேட்டதற்கு, `நாங்கள் ஏற்கெனவே எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிட்டோம்’ என்றார்கள் தொழிற்சாலை தரப்பில்.

அந்தப் பணத்தை நேற்றுதான் கோயில் நிர்வாகிகளிடம் கொடுத்தார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். நாங்கள் கேட்கவில்லை என்றால் அந்தப் பணமே வந்திருக்காது. நான் குற்றம் செய்தவன் என்று சொல்கிறார் கல்யாணசுந்தரம்.

செய்தியாளர் சந்திப்பில் தாதா தட்டாஞ்சாவடி செந்தில்

ஆனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் அமைச்சராக இருக்கும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். ஒன்பது கொலை வழக்கு என் மீது இருப்பதாக இவர் சொல்வதெல்லாம், காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

அதற்கு காரணம், காலாப்பட்டு மக்கள் தற்போது அவருடன் இல்லை. அந்த விரக்தியில்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு கல்யாணசுந்தரம் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார் என்பது ஒட்டுமொத்த புதுச்சேரிக்குமே தெரியும்.

இந்தியாவிலேயே அமைச்சராக இருக்கும்போது தலைமறைவான குற்றவாளி என்றால் அது இவர்தான். அதேபோல, `கருவடிக்குப்பம் உமா சங்கரை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்துவிடுவேன். சி.பி.ஐ வந்து என்ன புடுங்கிவிட்டது?’ என்று என்னுடைய ஆதரவாளர்களை மிரட்டுகிறார்.

`ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான்’

மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மூன்று பேரில் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இவர் யாரிடம் பேசினாரோ, அதை அவர்களே என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள்.

சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில், காலாப்பட்டு காவல் நிலையத்திற்கே சென்று போலீஸாரை மிரட்டியிருக்கிறார். அப்போது பெண்களை வைத்து தொழில் செய்த ஒருவரும் உடன் இருக்கிறார்.

பெண்களை வைத்து தொழில் செய்தவர்களைத்தான் தன்னுடன் வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். பெண்களைப் பற்றி நாங்கள் தவறாகப் பேசுவதாகக் கூறுகிறார். பெண்களை நீ என்னவெல்லாம் செய்தாய் என்று நான் சொல்லவா ? பெண்கள் தொடர்பான குற்றங்களில் அதிகம் தொடர்புடையவன் நீதான்.

தட்டாஞ்சாவடி செந்தில்

இவர் ரௌடிகள் என்று சொல்பவர்கள் அனைவரும், அவருக்கு வாக்களித்த மக்கள்தான். அவர்களை ரௌடிகள் என்கிறாரா ? அவர் எந்தக் குற்றச் செயல்களையும் செய்தது இல்லையா ? எம்.எல்.ஏ ஆனபிறகு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆள் வைக்கிறேன் என்று சொல்லி எத்தனை கோடி வாங்கியிருக்கிறாய் என்று மக்களுக்குத் தெரியும்.

என்னை கொலைக் குற்றவாளி என்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான்.

ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருந்தால் இவரால் அரசியல் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது சாதாரணமாகப் பேசுகிறேன். அடுத்த முறை போஸ்டர் அடித்து ஒட்டுவேன்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.

இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்... போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் (இனாம் நிலம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு ... மேலும் பார்க்க

Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்சிக்கும் ஆசிரியர்!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது.காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவி... மேலும் பார்க்க

`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு

மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.பி.மூர்த்தி, கோ.தளபதி... மேலும் பார்க்க