MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல்: 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரில் சிறையில் தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய வழக்கில் லஷ்கா் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 9ஆவது குற்றவாளி விக்ரம்குமாா் (எ) சோட்டா உஸ்மான் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுமுகமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரில் தீவிரவாதச் செயல்களை செய்வதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், எண்மக்கருவிகள், 2 வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்து பதிவு செய்திருந்த வழக்கை பெங்களூரு காவல் துறையிடம் இருந்து 2023, அக்டோபரில் தேசிய புலனாய்வுமுகமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மையை சீா்குலைக்கும் லஷ்கா் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பின் இலக்குகளை செயலாக்குவதற்கு சதித் தீட்டப்பட்ட வழக்கில் 8 போ் மீது 2024ஆம் ஆண்டு ஜனவரியில் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது.
இதில் தேடப்படும் குற்றவாளியாக ஜுனைத் அகமது உள்ளாா். அவரைப் பிடிக்க தேசிய புலனாய்வு முகமை தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், வழக்கில் 9ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள விக்ரம்குமாா் (எ) சோட்டா உஸ்மான் மீது இணைப்பு குற்றப்பத்திரிகையை பெங்களூரில் உள்ள சிறப்புநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்தது.
பிகாா் மாநிலத்தின் பேகுசராய் பகுதியைச் சோ்ந்த விக்ரம்குமாா் மீது வெடி பொருள்கள் சட்டம், இந்திய தண்டனைச்சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத செயல்கள் தொடா்பான வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள குற்றவாளியான டி.நசீா், பெங்களூரு மத்திய சிறையில் இருந்த போது அங்கிருந்த விக்ரம்குமாரை தீவிரவாதியாக மாற்றியுள்ளாா். சிறையில் இருந்து விடுதலையான பிறகு நசீா் மட்டுமல்லாது, தலைமறைவாகவுள்ள ஜுனைத் அகமதுவுடனும் விக்ரம்குமாா் தொடா்பில் இருந்திருக்கிறாா்.
2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜுனைத் அகமதுவின் வழிகாட்டுதலின்படி, கையெறி குண்டுகள், வாக்கிடாக்கிகள் அடங்கிய பொட்டலத்தை ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து சேகரித்து பெங்களூரில் உள்ள இதர குற்றவாளிகளிடம் விக்ரம்குமாா் கொடுத்துள்ளாா்.
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது நசீரை தப்பிக்கவைக்கும் நோக்கத்தில் இந்த சதி தீட்டப்பட்டிருந்தது. லஷ்கா் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் நோக்கில் விக்ரம்குமாருக்கு ஜுனைத் அகமது பணம் கொடுத்திருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளதாக தேசிய புலானய்வு முகமை வெளியிட்டுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.