வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!' - இளம் எழுத்தாளர் வெண்பா
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories' பதிப்பக அரங்கில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இளம் எழுத்தாளர் வெண்பாவிடம் பேட்டி கண்டோம்!
யார் இந்த வெண்பா?
வைஷ்ணவி என்ற இயற்பெயர் கொண்ட சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆய்வுத்துறையில் முனைவர் பட்டம் பெறும் நோக்கில் முன்னகரும் மாணவி "அவள் ஒரு பட்டாம்பூச்சி" என்ற கவிதை தொகுப்பின் மூலமாக எழுத்து உலகில் வெண்பா என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். தாயணை, அறிவதுமே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
``சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கம் தொடங்கிவிட்டது. என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திய நூல் திருக்குறள். எனக்கு தற்போது 1330 குறள்களும் பொருளுடனே தெரியும்.
எனது வாசிப்பு பழக்கம் 10 ஆம் வகுப்பிலிருந்து தீவிரமாகத் தொடங்கியது. பின்னர் சுஜாதாவின் புத்தகங்களையும், வரலாறு, அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதையும் வழக்கமாக்கிக்கொண்டேன். புத்தகம் எழுத வேண்டும் என்ற நோக்கில் எதையும் தொடங்கவில்லை.

ஒருமுறை சிறுகதை கட்டுரை போட்டியில் பங்கு பெறும்போது அதை இறுதியில் முடிக்கும்போது, துன்பியல் சம்பவமாக முடித்தேன். ஆனால் மற்றவர்கள் என்னை இதை மகிழ்ச்சியான ஒரு சிறுகதையாக மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.
அதன் அடிப்படையில் இன்னும் ஒரு 14 பக்கங்கள் கதையை நீட்டித்தேன். அதுவே, `அவள் ஒரு பட்டாம்பூச்சி' என்ற சிறுகதையாக மாறியது. பதிப்பாக வரவில்லை அமேசான் கிண்டிலில் வெளிவந்தது.
துறை சார்ந்து படிக்கும்போது கருப்பை அகற்றம், பால் ஒவ்வாமை குறித்து கட்டுரை எழுதினேன். இதைப் பார்த்த Her Stories பதிப்பகத்தில் உள்ளோர் தொடர்ந்து எழுதும்படி ஊக்குவித்தனர்.
தினசரி சந்திக்கும் பிரச்னைகள் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் மரபியல் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத ஆரம்பித்தேன். அப்படி வெளிவந்தது தான் தாயனை (2024) புத்தகம். இதில் 15 கட்டுரைகள் உள்ளன. பலரும் ஊக்குவித்ததன் காரணமாக அடுத்து வெளிவந்ததுதான் "அறிவதே"(2025) புத்தகம். தற்போது மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற பெண்கள் என்ற தலைப்பில், புத்தகம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டில் நீங்கள் அதை எதிர்பார்க்கலாம்.

நான் படித்தது அறிவியல் துறை சார்ந்தது என்பதால், பெரும்பாலும் வாசகர் வட்டம் நான் படித்த கல்லூரிகளில் காண்பதே அரிதான ஒன்று.
என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பவர்களைத் தவிர இந்த இலக்கிய வெளிக்கு வந்து நான் பார்த்ததில்லை. பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்களைப் பற்றி பேசுவதை விட நம்மைச் சுற்றி நடக்கும் கருத்துகளை ஆழமாக விவாதிக்க வேண்டியது அவசியமான ஒன்று.

பெண்கள் பேசினால்தான் தீர்வு வரும். கல்லூரிகளில் வாசகர் வட்டத்தின் வட்டமும் குறைந்து வருகிறது. மாணவர்கள் மட்டுமன்றி மாணவிகளும் விவாத அரங்கிலும், வாசகர் வட்டங்களிலும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர வேண்டும்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி பெண் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்கள் பெரியளவில் வெளியில் பேசப்படுவது இல்லை. ஆண் எழுத்தாளர்கள்போல பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வெளியே பேசப்பட வேண்டும்" என்றார்.















