மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியி...
`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பொய்யாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். இதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சித்தபோது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், இதற்காக எனக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 10 இன்ஸ்பெக்டர்கள் மாறி விட்டனர். இவர்கள் யாரும் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், "குற்றம் புரியும் நோக்குடன் சிலர் கூடியிருந்தனர் என்று வழக்கு பதிவு செய்யும்போது அதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் 8 ஆண்டுகளாக விசாரணை நடத்தவில்லை, 2017-ல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை 24.6.2025-ல்தான் நீதிமன்றத்துக்கே அனுப்பியுள்ளனர். இது பொய் வழக்கு என்று தெரிவதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்வது மட்டும் மனுதாரருக்கு முழுமையான நீதியை வழங்காது.
ஒருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் நற்பெயருக்கு களங்கம், சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு இழப்பு, உறவுகளில் பிரச்சனை, உளவியல் சிக்கல் ஏற்படுகிறது.
போலீஸாரின் அதிகார மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது என ஐநா அறிவித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சத்தை தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும், இதை சம்பந்தப்பட்ட போலீஸாரிடமிருந்த வசூலிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.


















