பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மேற்காசியாவில் நீடித்து வரும் நெருக்கடி நிலை இன்னும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் எரிசக்தி, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் உலகளாவிய அழுத்தம் அதிகரித்து வருகிறது. எரிபொருள், ஆற்றல் மற்றும் உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருவதால் இந்தியாவும் தவிர்க்க முடியாமல் அதன் பாதிப்பை உணர்ந்து வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே பட்ஜெட்டுகள் அதிகரித்து வரும் வேளையிலும், சந்தை வருவாய் சீரற்றதாக இருக்கும் சூழலிலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உயரும் செலவுகள் திரைப்படத் தயாரிப்பை மட்டும் பாதிக்காது. பணவீக்க அழுத்தத்தின் காரணமாக வரும் மாதங்களில் பொழுதுபோக்கிற்கான நுகர்வோர் செலவிடும் முறையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்தச் சுமை தவிர்க்க முடியாமல் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், நிதியாளர்கள் மற்றும் முழு திரையுலக கட்டமைப்பின் மீதும் விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அந்தத் திரைப்படத்தின் தரத்திற்காக இருக்க வேண்டுமே தவிர, வெறும் ஆடம்பரத்திற்காக இருக்கக்கூடாது.
நான் தெளிவாகச் சொல்கிறேன். சினிமா பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, கண்ணியம், உணவு, போக்குவரத்து, தங்குமிடம் அல்லது மனிதாபிமான வேலைச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. கடினமாக உழைப்பவர்களின் மீது இந்தச் சுமையை ஏற்றக்கூடாது.
நமக்குத் தேவையான மாற்றம் என்பது தேவையற்ற வீணடிப்பு, மோசமான திட்டமிடல், ஊதிப் பெருக்கப்பட்ட உதவியாளர்கள் கலாச்சாரம் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், படப்பிடிப்பு தாமதங்கள் மற்றும் செலவுக்கும் நோக்கத்திற்கும் இடையிலான இடைவெளி ஆகியவற்றில்தான் இருக்க வேண்டும். ஏன் ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் மலர வேண்டும், ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் முடிய வேண்டும்? காதலுக்கு அந்நியச் செலாவணி தேவையில்லை. இந்திய சினிமாவும், இந்தியர்களும் தம்மீதும் நமது அழகான நாட்டின் மீதும் இன்னும் சற்று அதிக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இந்தியத் திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இதுவென நான் நம்புகிறேன். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சங்கங்கள், ஸ்டுடியோக்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், OTT தளங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் பொருளாதார சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒரு விரிவான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
நாமனைவரும் இணைந்து நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளை உருவாக்க வேண்டும். சிறந்த படப்பிடிப்பு ஒழுக்கம், கச்சிதமான கால அட்டவணைகள், ஆடம்பர மற்றும் உதவியாளர்கள் செலவுகளைக் குறைத்தல், உள்ளூர் மாற்றுகள் இருக்கும்போது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், படப்பிடிப்பு தளங்களில் மின்னாற்றலைச் சேமித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செட் அமைப்புகள் மற்றும் பொருட்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல் போன்றவற்றை நாம் முன்னெடுக்க வேண்டும்.
ஆடம்பரத்தைத்தான் நாம் பெரும்பாலும் பிரமாண்டம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால், நமது சிறந்த திரைப்படங்கள் பல அதிகப்படியான செலவுகளால் அல்ல, மாறாகத் தெளிவு, ஒழுக்கம் மற்றும் உறுதியான நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டன.
உலகளாவிய நிச்சயமற்ற காலங்களில் ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்ற தேசிய அழைப்பு சரியான நேரத்தில் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகும் இந்தச் சூழலுக்கு ஏற்றவாறு உயர வேண்டும்.

இது தனிப்பட்ட நலனை விட தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம். நமது துறை கலாச்சாரத்தை வடிவமைக்கிறது, சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது. பொழுதுபோக்கைத் தாண்டி சினிமாவிற்குப் பொறுப்புகள் உள்ளன.
இந்தத் துறையிலிருந்து அதிகம் பலன் பெற்ற நாம் அனைவரும் முதலில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இன்று சினிமாவின் பொருளாதாரத்தைப் பாதுகாத்தால் மட்டுமே, சினிமாவின் எதிர்காலத்தை நம்மால் உறுதி செய்ய முடியும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
















