செய்திகள் :

போலியாக ஓர் இராணுவப் படை! `பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04

post image

உக்கிரமான கட்டத்தில் இரண்டாம் உலகப் போர்.

ஜெர்மன் கை ஓங்கி இருந்தது. சற்று அசந்தால் மொத்த ஐரோப்பாவையும் ஹிட்லர் கபளீகரம் செய்து விடுவார். அச்சு நாடுகளின் கூட்டணியை தோற்கடிக்கத்தாக வேண்டும். 

போர் மூண்ட பின்பு முதன்முறையாக ‘பிக் பிரதர்ஸ்’ மூவரும் சந்தித்தனர். ரஷ்ய அதிபர் ஜோசஃப் ஸ்டாலின், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் - நேச நாடுகளின் தலைவர்கள் போர் வியூகங்களை விவாதித்தனர். 1943, நவம்பர் 30-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. 

“போர்க் காலத்தில், உண்மை என்பது மிகவும் விலை மதிப்பற்றது என்பதால், அதை எப்போதும் பொய்கள் எனும் மெய்க்காப்பாளர்கள் சூழப் பாதுகாக்க வேண்டும்.” (In wartime, truth is so precious that she should always be attended by a bodyguard of lies) ஐக்கிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் சர்ச்சில் இலக்கியத்தனமாகப் பேசினார். 

இலக்கியத்தில் நாட்டமில்லாத ரஷ்ய அதிபர் ஸ்டாலின், “இதைத்தான் நாங்கள் ராணுவ கள்ளத்தனம் (Military Cunning) என்கிறோம்…” என சர்ச்சிலின் தூர நோக்குப் பார்வையை ஆமோதித்தார். 

`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04
`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04

இறுதியில், Operation Bodyguard என சர்ச்சிலின் வார்த்தைகளிலிருந்தே, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டது. இதை கச்சிதமாக செயல்படுத்த Operation Fortitude என்ற உளவு நடவடிக்கை ஒன்றை செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

பிரிட்டனின் MI5 உளவு அதிகாரி தாமஸ் ஹாரிஸ் இந்தத் திட்டங்களை விவரித்தார். கார்சியா நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தார். லண்டன் வந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. MI5-ல் இணைந்த பின், அவருடைய பெயர் ‘கார்போ’. ஜெர்மன் உளவுத்துறை அப்வேருக்கு தகவல் அனுப்புவதையும் தொடர்ந்தார். இரட்டை உளவாளி. லிஸ்பனில் இருந்து போலியாக செய்து வந்த வேலையை, இப்போது லண்டனில் இருந்தே போலியாக செய்து வந்தார்.

கார்போவின் உத்தரவு அதிகாரி தாமஸ் ஹாரிஸிடம் பலமுறை கேட்டும் சொல்ல மறுத்துவிட்டார்: “எப்படி என்னை MI5-ல் சேர்த்துக் கொண்டீர்கள்? நான் அனுப்பியதில் எந்தத் தகவல் உங்களைக் கவர்ந்தது?” 

தாமஸ் ஹாரிஸ் வாயே திறக்கவில்லை.

“கார்போ, இதுவரை எத்தனை ஏஜெண்ட்டுகளை ரெடி பண்ணி வச்சிருக்கீங்க?” வேறு பக்கம் பேச்சைத் திருப்பினார்.

“லிஸ்பனில் இருந்தபோது 7 பேர், இங்கு வந்த பின் இன்னும் 17 பேர்…” 

“ஓகே… இந்த 24 பேரும் Operation Fortitude-க்கு அவசியம் தேவைப்படுவார்கள்.”

“பக்காவா பண்ணிடலாம் பாஸ். அதுக்கு முன்னாடி, அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்… MI5-ல என்னை எப்படி சேர்த்துக்கிட்டீங்க?” கார்போ கெஞ்சினார்.

“சொல்றேன். லிஸ்பனில் இருந்து ஏழெட்டு மாதங்களாக நீங்கள் அனுப்பி வந்த தகவல்களை நான் கவனித்து வந்தேன். அங்கு இருக்கிற பிரிட்டன் தூதரகத்தில், டக்ளஸ் பிரிஸ்டோவிடம் தகவல் சொல்லுவீங்கல்ல…”

“ஆமாம். அவர் உங்களிடம் சொன்னாரா?” கார்போவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. 

“யெஸ். நீங்க புத்திசாலின்னு புரிஞ்சிக்கிட்டேன். வெறும் நியூஸ் பேப்பர் தகவலை மட்டும் வச்சிக்கிட்டு, போலியாக உளவாளிகளை உருவாக்கி, ஜெர்மனியை ஏமாத்தி இருக்கீங்க. Best actor in the world. அப்போதே உங்களை சேர்த்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், நாளாகி விட்டது.”

“அப்புறம் எப்படி…?”

“மில்டன் கீன்ஸ் சிட்டி, ப்ளெட்ச்லே பூங்காவுல (Bletchley Park) ஒரு அரண்மனை இருக்கு. அங்கு, நம்முடைய உளவுத்துறையின் குறியீட்டு உடைப்பு (Code Breaking Centre) அணி செயல்பட்டு வருகிறது. ‘லிவர்பூல் துறைமுகத்தில் இருந்து, மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவுக்கு பிரிட்டனின் ராணுவ கப்பல்கள் முன்னேறுகின்றன.’ அந்த அணியினர் தந்த தகவல் இது. 1942 ஏப்ரல் மாசத்துல, அராபெல் பேருல, அப்வேருக்கு நீங்க அனுப்பின தகவல் இது. அப்போதுதான் உங்களை உண்மையிலேயே நம்பத் தொடங்கினேன்.”

“ஓஹோ… ஆமா, அதுவும் ஒரு பொய்யான தகவல்தான். அப்ப, அப்வேர் தகவல்களை இடைமறித்து கேட்கவில்லை என்றால் நான் லிஸ்பனிலேயே கிடந்திருப்பேன்…” இருவரும் சிரித்துக் கொண்டனர்.

“இப்பவும் அந்த மாதிரி ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும்…” Operation Fortitude-ன் நோக்கத்தை விவரித்தார் தாமஸ் ஹாரிஸ். 

`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04
`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04

“கார்போ… இந்த முறை நீங்க வெறுமனே தகவலை மட்டும் அனுப்பப் போறதில்ல. அதனை நம்ப வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.”

உத்தரவு அதிகாரியின் சமிக்ஞையை கார்போ புரிந்து கொண்டார். அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டினார். தன்னுடைய 24 ஏஜெண்ட்டுகளையும் களத்தில் இறக்கினார். பல மாதங்களாக நாளொன்றுக்கு 4 முதல் 6 தகவல்களை அப்வேருக்கு அனுப்பினர். ஏறக்குறைய 1200-க்கும் மேற்பட்ட வயர்லெஸ் செய்திகள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டன.

இந்தப் போலி தகவல்களின் சாராம்சம்: “1944-ம் ஆண்டு ஜூலை மாதத்தின் நடுப் பகுதியில் நேச நாடுகளின் படைகள் பிரமாண்ட தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளன. ஃபிரான்ஸின் முக்கிய கடற்கரை நகரான பாட் காலே (Pas-de-Calais) பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு Operation Fortitude என்று பெயர்.”

உஷாரான ஹிட்லர், பாட் காலே பகுதியில் கவனம் குவித்தார். சுமார் 3 லட்சம் வீரர்களை இறக்கினார். எல்லைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க உத்தரவிட்டார். உளவு தகவல்களை ஒருங்கிணைத்து தளபதிகளை எச்சரித்தார். 

மறுபுறம்.

“அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் (General George Patton) தலைமையில் First United States Army Group (FUSAG) என்ற படை உருவாக்கப்பட்டது. FUSAG படையில் ஒன்றரை லட்சம் வீரர்கள் தென் இங்கிலாந்து பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு யார்க்‌ஷைரில் Operation Fortitude-க்கு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.”

இது கார்போ, அப்வேருக்கு அனுப்பிய தகவல். போருக்கு தயாராகி வரும் விமானப் படைத் தளங்கள், கப்பற்படைத் தளங்கள், ராணுவ வீரர்கள் பயிற்சி எடுக்கும் படங்களையும் அனுப்பினார்.

கார்போவின் தகவல்களை ஹிட்லர் கவனமாக ஆராய்ந்தார். பாட் காலே-வில் கால்பதிக்கும் நேச நாடுகளின் படைகளை துவம்சம் செய்ய காத்திருந்தார். இனி மேற்கு ஐரோப்பாவே என் காலடியில்தான். இறுமாப்பில் கர்ஜித்தார் ஹிட்லர். கார்போ அனுப்பிய தகவல்களை கண்ணை மூடிக் கொண்டு நம்பினார். கார்போவை ஒரு தீர்க்கதரிசியாகவே பார்த்தார்.

`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04
`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04

1944 ஜூன் 6. எப்போதும் போல விடிந்தது. 

ஆனால் ஹிட்லர் வழக்கம் போல காலையிலேயே எழுந்திருக்கவில்லை. அதுதான் எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றனவே. அவருக்கு என்ன கவலை? காலை பத்து மணி வரை அயர்ந்து தூங்கினார்.

அந்தப் பக்கம் ஃபியூரர் தூங்க, இந்தப் பக்கம் காதலியின் பிறந்த நாளைக் கொண்டாட ஐந்நூறு மைல் தொலைவில் உள்ள சொந்த நகருக்கு வந்துவிட்டார், பாலைவன நரி (The Desert Fox) என்றழைக்கப்பட்ட ஜெனரல் ஃபீல்ட்மார்ஷல் எர்வின் ரொம்மெல் (Erwin Rommel). 

ஃபிரான்ஸின் நார்மண்டி (Normandy) கடற்கரைப் பகுதியில் போர்ப் பதற்றம் தொற்றியது. நேச நாட்டுப் படை வீரர்கள் சாரை சாரையாக அணிவகுத்தனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஃபிரான்ஸ், போலந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம் என 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் ராணுவ வீரர்கள் ஒரே நாளில் நார்மண்டியில் குவிந்தனர். 

`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04
`பொய்யே மெய்யின் அரண்' | உளவன் - 04

80 கிலோமீட்டர் நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதி. பாசறை அமைக்க, படை நடத்த கடற்கரையை ஒட்டி 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பரந்த நிலப்பகுதி. இப்படி போர் முக்கியத்துவம் வாய்ந்த நார்மண்டி பகுதியை சுற்றி வளைத்தனர். பாட் காலே-வுக்கும் நார்மண்டிக்கும் இடையிலான தூரம் சுமார் 180 மைல்தான்.

எதிர்த் தரப்போ நிராயுத பாணியாக நின்றது. 2000 ஜெர்மன் வீரர்களே நார்மண்டியில் இருந்தனர். அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ஐம்பதாயிரம் வீரர்களை பாட் காலே-வுக்கு அனுப்பி விட்டனர். 

நார்மண்டி முற்றுகையை ஜெர்மன் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு கார்போ அளித்த தகவல்தான் முக்கியம். பாட் காலே முற்றுகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அட்லாண்டிக் கடலை ஒட்டிய கடற்கரைப் பகுதி முழுவதும் - ஃபிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே வரை - ஜெர்மன் கட்டுப்பாட்டில் இருந்தது. கடல் வழியாக எதிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சுமார் 2000 மைல் நீண்ட இந்த கடற்கரைப் பகுதியில், பல்வேறு கட்டுமானங்களை ஜெர்மன் எழுப்பியிருந்தது. அட்லாண்டிக் சுவர் (Atlantic Wall) என அழைக்கப்பட்ட இந்த அரணை தகர்த்து முன்னேறுவதுதான் நேச நாடுகளின் திட்டம்.

1944 ஜூன் 9. பாட் காலே-விலிருந்து 25,000 வீரர்களை நார்மண்டிக்கு விரைய உத்தரவிட்டது ஜெர்மன். அதே தினத்தில் கார்போவிடமிருந்து நீண்ட தகவல் வந்தது: “நார்மண்டி படையெடுப்பு ஏமாற்று வேலை. இது போலி தாக்குதல். உண்மையான படையெடுப்பு ஜூலை மாதத்தில் பாட் காலே-வில் திட்டமிடப்பட்டுள்ளது. தயாராக இருக்கவும்.” இதையும் ஹிட்லர் அப்படியே நம்பினார். புறப்பட தயாராக இருந்த படையையும் தடுத்து நிறுத்தினார்.

இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர தீட்டப்பட்ட திட்டம் Operation Overlord. இதனை நிறைவேற்ற நேச நாடுகளின் சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கான திட்டம் Operation Bodyguard. நேச நாடுகளின் படைபலத்தை பாதுகாக்க ஜெர்மனியை திசை திருப்ப வேண்டும். அதற்காக போலியாக ஒரு திட்டம். போலியாக ஓர் இராணுவப் படை (FUSAG). போலியாக ஓர் அலுவலகம்.

இந்த ‘போலி’களின் திட்டத்துக்கும் ஒரு பெயர். அதுதான் Operation Fortitude. 

கடைசி வரை ஜெர்மன் விழித்துக் கொள்ளவே இல்லை. எந்த எதிர்ப்புமின்றி நேச நாடுகளின் துருப்புகள் முன்னேறின. அட்லாண்டிக் சுவர் அரணை முழுவதுமாக உடைத்து, ஃபிரான்ஸை விடுவித்தது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த முற்றுகையில், நாஜி ஜெர்மனியின் பிடியில் இருந்த, மேற்கு ஐரோப்பிய பகுதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டன. 

ஒருவேளை ஜெர்மன் படைகள் நார்மண்டியில் குவிக்கப்பட்டிருந்தால்? அது பேரழிவாக மாறியிருக்கும். மாறாக, சொற்ப உயிரிழப்புகளோடு விரைவில் முடிவுக்கு வந்தது இரண்டாம் உலகப் போர். இந்த வெற்றியை, ‘சுதந்திரத்துக்கான பெரும் சிலுவைப் போர் (A Great Crusade for Freedom)’ என வர்ணித்தார் அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட். 

ஸ்பெயின் தேசத்துக்காரர். பிரிட்டனில் உளவுப் பணி. ஜெர்மனிக்கு மட்டுமல்ல, நேச நாடுகளுக்கும் நம்பிக்கை நாயகன். இதெல்லாம் அடையாளம். ஃபாசிஸத்தை எதிர்க்க வேண்டுமென்பதே கொள்கை. இப்படி, இரண்டாம் உலகப் போரின் இறுதி அத்தியாயத்தை எழுதிய கார்போதான் இரட்டை உளவாளிகள் உலகின் டான். இன்றுவரை!

(தொடரும்.!)

தலையில் ஒன்பது தையல் - இக்கட்டான சூழ்நிலையில் என் உயிரைக் காப்பாற்றிய காவல் தெய்வங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்று மாநிலக் கல்லூரித் தோழன்... இன்று எங்களைக் காக்கும் மருத்துவன்! - நட்பின் நன்றிக் காணிக்கை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை பற்றிய பார்வையை மாற்றிய டாக்டர் சமியுல்லா! - மாணவனின் நெஞ்சார்ந்த நன்றிக் கட்டுரை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அந்த நாள்! - ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றியவரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உயிரின் எல்லையில் நிற்கும் மனிதர்கள்: மருத்துவர் தினம் சொல்லும் அமைதியான உண்மை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

26 ஆண்டுக்கால அல்சர் துயரம்... 6 மாதங்களில் குணப்படுத்திய ஹோமியோபதி டாக்டர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க