'பா.ம.க உங்கள் குடும்ப சொத்து அல்ல' டு `உறுதிக்கொடுத்த த.வெ.க; திருமா விரைவில்.!...
ஐ.டி ஊழியர்களின் குழந்தைகளுக்கான டே கேர் - வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து கதவை அடைத்த பெண் ஊழியர்கள்
பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி கம்பெனியில் அங்கு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனிப்பதற்காக, `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்' என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், தங்கள் குழந்தைகளை எளிதாகச் சென்று பார்க்கும் வசதிக்காக இது அமைக்கப்பட்டு இருந்தது.
பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைகளை இங்கே விட்டுச்செல்வது வழக்கம். இக்குழந்தைகளை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சித்ரவதை செய்வது போன்ற காணொலி வாட்ஸ்ஆப் மூலம் பரவியது.
அந்த காணொலியில் குழந்தைகள் அழாமல் இருக்க அவர்களை வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து அவர்களின் வாயில் தண்ணீர் விழுவது போன்று செய்து வைத்திருந்தனர். அதோடு அவர்கள் பாத்ரூம் கதவையும் அடைத்து வைத்திருந்தனர்.

இது தொடர்பான காணொலிகளை பார்த்தவுடன் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த காணொலியை போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர்கள், புகார் கொடுத்தவர்கள் மற்றும் பிற சாட்சிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
விசாரணையின் போது சேகரிக்கப்படும் ஆதாரங்களை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மேலும் தற்காலிகமாக அங்கு செயல்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்படுவதாக கேப் ஜெமினி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிலும் தனியாக ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.
கேப்கெமினி நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே கேப்கெமினி முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. உண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு வளாகத்தில் உள்ள பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தை தற்காலிகமாக மூடுகிறோம்," என்று தெரிவித்துள்ளது.




















