பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெ...
`போலீஸ் துணையுடன் தற்கொலைக்கு.!' - வீட்டுக்குள் இருந்தே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவராக இருக்கிறார்.
தஞ்சாவூர், பால்பண்ணை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவருக்கு தஞ்சாவூர், செங்கிப்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருந்தது.
இந்நிலையில் 2015ல் ஷேக் சிராஜூதீன் இறந்து விட, அவரது மனைவி முகமதா பேகம்(76) சொத்துக்களை கவனித்து வந்துள்ளார். இதைதொடர்ந்து, தஞ்சாவூர் பால்ப்பண்ணை அருகே சிராஜ்பூர் நகர் என்ற பெயரில் வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்ததில் செந்தில் தரப்புக்கும், முகமதா பேகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் முகமதா பேகம் சிங்கப்பூர் சென்று விட, தன் பெயரிலான சொத்துக்களை பராமரிப்பதற்குறிய பவரை செந்திலிடம் கொடுத்தார் என்கிறார்கள்.

பின்னர், போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை தன்னிடம் இருந்து அபகரித்து விட்டதாக முகமதா பேகம், செந்தில் உள்ளிட்டோர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் கேபிள் செந்தில், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு முகமதா பேகம், தஞ்சாவூர் ரிஜிஸ்டர் அலுவகத்திற்கு சென்றதாகவும் அங்கு செந்தில் அவரை மிரட்டியதாகவும் முகமதா பேகம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார், இன்று காலை 5 மணியளவில் சிராஜ்பூர் நகரில் உள்ள கேபிள் செந்தில் வீட்டிற்கு அவரை கைது செய்ய சென்றுள்ளனர்.
இதையறிந்த செந்தில், வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தவர் எதற்காக கைது செய்ய வந்தீர்கள் என்றுள்ளார். புகார் குறித்த விபரத்தை போலீஸ் சொல்ல, `இது பொய் வழக்கு நான் முகமதா பேகத்தை மிரட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை கொடுங்கள்' என்றுள்ளார்.
மேலும் தனக்கு தொடர்ந்து போலீஸ் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறி தூக்க மாத்திரை விழுங்கி நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். தூக்க மாத்திரை மற்றும் முகமதா பேகம் செய்துள்ள சட்ட விதிமீறல்கள் குறித்து போட்டோவுடன் அதிமுக கட்சிக்கான வாட்ஸ்அப் உள்ளிட்ட குரூப்பில் அவர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த கேபிள் செந்தில் ஆதரவாளர்கள் வீட்டுக்கு முன் திரண்டனர். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் பூட்டிய வீட்டுக்குள் அறையில் இருந்தபடி கேபிள் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கடந்த டிசம்பர் 30ம் தேதி என்னோட வாட்ஸ் அப்பிற்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான், என் மனைவி உட்பட 12 மீது ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்திருப்பதாக சொல்லியிருந்தனர். மறுநாள் என் போட்டோவை போட்டு 800 கோடி நில மோசடி செய்ததாக என்னை பற்றி போஸ்டர் ஒட்டப்பட்டது. என்னை பற்றி தவறான கருத்துக்கள் பரபரப்பட்டன.
இதையடுத்து என் வழக்கறிஞர் மூலம் நான் நேரடியாக மாவட்ட குற்றப்பிரிவிற்கு சென்று ஆஜராகி எனக்கும், என் மனைவிக்கும், மனைவியின் தங்கைக்கும் சம்மன் கேட்டேன். நான் வாங்கிய சொத்துக்கள் குறித்த விபரங்களையும் சப்மிட் செய்தேன். எல்லாவற்றிற்கும் முறையாக வருமான வரி கட்டியுள்ளேன். உடனே, எல்லாம் சரியாக உள்ளதாக சொன்ன போலீஸ், உங்க மீது எப்படி புகார் கொடுக்கலாம் உங்களுக்கும், முகமதா பேகம் தரப்பிற்கு என்ன தொடர்பு என்றனர். அவர் போட்ட வீட்டு மனைகளுக்கு நான் புரமோட் செய்து கொடுத்தேன். இதற்கு நான் அவர்களிடமிருந்து பணமாக வாங்கவில்லை என்ற ஆதாரத்தையும் கொடுத்தேன்.

அதன் பிறகு மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிமதி மேடம், தொடர்ந்து எனது அலுவலகத்திற்கு வந்து எதாவது கேட்டு தொந்தரவு செய்தார். மேலும் பைபாஸில் போடபட்டுள்ள லேஅவுட்டில் ப்ளாட் வாங்க வேண்டும் எனவும் கேட்டார். ரவிமதியும், அவரது கணவரும் என்னிடம் போனில் பேசிய ஆடியோ நான் வைத்துள்ளேன். இந்த மூணு மாசத்தில் ஒரு நாள் கூட நான் நிம்மதியாக இல்லை. தொடர்ந்து போலீஸ் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதன் பிறகு எனது வக்கீல் ஆலோசனை பெயரில் முன் ஜாமீன் வாங்கினேன். கண்டிஷன் பெயிலில் நானும், என் மனைவியும் மாவட்ட குற்றப்பிரிவில் கையெழுத்து போடுறோம்.
இதற்கிடையில் பொய் வழக்கு ஒன்று போட்டு என்னை கைது செய்ய வந்துள்ளனர். அதனால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்கிறேன். இதுக்கு மேல் இந்த உலகத்தில் வாழ முடியாது. நீதி என்பதே இல்லை" என்றதும் கண்கள் கலங்கினார்.
``நான் பெண்ணை மிரட்டியதாக வழக்கு பதிந்துள்ளதாக சொல்கிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை, ரூ.800 கோடி மோசடி வழக்கில் கூட என்னிடம் விசாரணை செய்யவில்லை. நான் நேரில் போய் சம்மன் கேட்டு ஆஜர் ஆனேன். சிங்கப்பூர் சிட்டிசன் என சொல்லும் முகமதா பேகம், இந்திய சிட்டிசனுக்கான அனைத்தும் ஆவணங்களும் அவருக்கு மட்டுமல்ல அவரது மகன், மகளுக்கும் வைத்துள்ளார். இது குற்றமில்லையா?

வீட்டுமனை விற்ற பணத்திற்கும் ஐடி தாக்கல் செய்துள்ளார். முகமதா வந்து தான் பத்திரம் செய்து கொடுத்தார். குடியிருப்பு வாசிகளை கேட்டால் இது தெரியும். ஐஜி தலையீட்டில் இதை செய்வதாகவும், வாங்கிய சொத்தை எழுதி கொடுத்து விடுங்கள் பிரச்னை தீர்ந்து விடும் என ரவிமதி மிரட்டுகிறார். வழகில் இருக்க கூடிய ரேவதியை கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் கைது செய்தனர். ஆனால் இதுவரை ரிமாண்ட் செய்யவில்லை. சொந்த கஸ்டடியில் வைத்துள்ளனர். ஆட்கொணர்வு மனு போட்ட பிறகு ரேவதியை அவருடைய உறவினர் வீட்டில் விட்டு விட்டதாக சொன்னார்கள்.
குறிப்பிட்டு சொல்லப்படும் அந்த சொத்தின் மதிப்பு 800 கோடி இல்லை. இன்று ப்ளாட் மதிப்பு கூடி விட்டது ஒவ்வொரு ப்ளாட்டுக்கும் ரூ.10 லட்சம் வாங்கி கொடுங்கள் என முகமதா பேகம் கேட்கிறார். எட்டு வருடத்திற்கு முன்பு விற்ற சொத்துக்கு இப்போது போய் பத்து லட்சம் கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.
இதில் நியாயம் இருக்கிறதா. நேற்று ஹோட்டலில் சாப்பிட்ட என்னை போலீஸ் கைது செய்ய வந்தனர். இன்று வீட்டுக்கு கைது செய்ய வந்தனர். முகமதா பேகம் உறவினரான ஷேக் இலியாஸ் கையில் வைத்து கொண்டு பண பலம் படைத்தவர்கள், போலீஸ் துணையுடன் என்னையும், என் குடும்பத்தையும் தற்கொலைக்கு தூண்டுகின்றனர். சிங்கப்பூரில் வழக்கில் கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தவர் முகமதா பேகம். இவருக்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஷேக் இலியாஸ் தரப்பால் எனக்கும், என் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது எல்லோரும் சேர்ந்து எனக்கு நீதி பெற்றுத்தரணும்" என்றார்.

















