"ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்!" - கஞ்சா கருப்ப...
மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது. சாலையோரம் விவசாயக் கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றுக்குள் வேன் விழுந்தது.
இதனை பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்து ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் உடனே வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வந்து தண்ணீருக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் தண்ணீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பெண்கள் மற்றும் 6 மாத குழந்தையும் அடங்கும்.
இறந்து போன அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் சுனேத்ரா பவார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதோடு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதமும் இதே போன்று கார் ஒன்று நாசிக் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். உடனே அந்தக் கிணற்றை அதிகாரிகள் மூடிவிட்டனர்.



















