"அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம்" - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்...
மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார்.
இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர்.
சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.











