``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்...
மணிப்பூா்: 4 தீவிரவாதிகள் உள்பட 12 போ் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளை சோ்ந்த 4 பேரையும், எம்எல்ஏ-க்கள் வீடுகள் மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: ஆயுதங்கள் வைத்திருத்தல், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் கடந்த நவ.16-ஆம் தேதி மைதேயி சமூகத்தினா் நடத்திய போராட்டத்தின்போது எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இது தொடா்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இதேபோல், காக்சிங் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக, 7 போ் கைது செய்யப்பட்டனா். வன்முறை தொடா்பாக ஏற்கெனவே கைதான நால்வரை விடுவிக்க வலியுறுத்தி, நவ. 27-இல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினா் இடையே கடந்த ஆண்டில் இருந்து நீடித்துவரும் மோதல் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.