Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரி...
மதுரை: அரசுப் பள்ளியில் நடந்த தேர்தல்; வாக்கு செலுத்திய மாணவர்கள்; ஆசிரியர்களின் புதிய முயற்சி!
16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மாணவ-மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேரணி உள்ளிட்டவற்றை நடத்துமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இதன் அடிப்படையில் மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய முயற்சி நடந்தது.
Al தொழில்நுட்பத்துடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடியைப் பயன்படுத்தி மாணவர் தலைவர் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு அமைச்சரவையை ஒதுக்கி மாணவர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்றனர்.
இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் நம்மிடையே பேசும்போது, "செப்டம்பர் மாதம் இந்தப் பள்ளியினுடைய தலைமை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதற்கான அறிவிப்பு வந்தது. அதன் படி விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டி, கவிதை, பேச்சுப் போட்டி நடத்தி அதற்கான முடிவுகளும் தயாராக இருக்கின்றன.

நாங்கள் புதிய முயற்சியாக வாக்குச்சாவடியில் என்ன நடக்கிறது, வாக்காளருடைய உரிமைகள் என்னென்ன, எப்படி ஓட்டு போட வேண்டும், நாம் ஓட்டு போடுவதன் மூலம் எப்படி தலைவர்கள் உருவாகிறார்கள் என்பது குறித்து சொல்லி தருகிறோம்.
இதற்காக அவர்களுக்கு ஒரு நிஜ வாக்குச்சாவடி மாதிரி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதில் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் எல்லோரும் இருப்பது போன்று தயார் செய்து இருக்கிறோம்.
முந்தைய காலங்களைப் போல பேப்பர் ஓட்டு முறை இல்லாமல், தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒரு பிரத்யேகச் செயலி (App) மூலம் டிஜிட்டல் முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் நிஜமான தேர்தல் இயந்திரங்களில் இருப்பது போன்றே இவிஎம் மெஷின், விவிபேட் போன்றவை அந்தச் செயலியில் காட்டும். இதில் மாணவர்கள் சின்னத்திற்கு நேராக உள்ள ஆப்ஷனை அழுத்தினாலே விளக்கு எரிந்து அதில் சின்னம் தெரியும்.
தேர்தலில் நிற்பதற்கென எட்டு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னத்தை ஒதுக்கி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளோம். வேட்பாளர்களாக நின்ற மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதி மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பிற மாணவர்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் ஓட்டு போடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். வரும் செவ்வாய்கிழமை மாணவர்களின் முன்னிலையில் தேர்தல் முடிவுகள் வெளியிட இருக்கிறோம். இதில் வெற்றி பெறும் மாணவர்களை ஒவ்வொரு துறை அமைச்சராகப் பொறுப்பு கொடுப்போம்.
தேர்தல் முடிவுகளை வெளியிடும் போது பெற்றோர்கள் நேரடியாக வந்து பார்க்கலாம். அவர்களுக்கும் வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை 220 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இது குறித்து புரிந்துகொண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் வருகிறது. பெற்றோர்களுமே அது சம்பந்தமான நிறைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களும் கட்சிகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்காக பள்ளி அளவில் நாங்களே ஒரு செய்தி சேனல் மாதிரி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதில் பள்ளியின் சார்பில் முக்கியமான 10 செய்திகளைத் தேர்ந்தெடுத்து மாணவர்களே செய்தி வாசிக்க வைக்கிறோம்

எந்தக் கட்சியினுடைய எந்தத் தலைவருக்கு, என்ன சின்னம் இருக்கிறது என எல்லாமே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
நம்முடைய சமூக அறிவியல் பாடங்களில் இது சம்பந்தமான பாடங்களே இருக்காது. இது சம்பந்தமாகச் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு அறிவும் வளரும். ஜனநாயகத்தினுடைய முக்கியமான கடமையும் தெரியும் என்பதற்காக இதைத் தொடங்கியிருக்கிறோம்" என்றார்.
















