செய்திகள் :

மதுரை மாவட்டம் ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்: ராஜராஜ சோழன் திருப்பணி செய்த கோயில்!

post image

மதுரை ஈசனின் திருவடி பட்ட மண். அங்குதான் ஈசன் பல்வேறு திருவிளையாடல்களை நடத்திய தலம். அப்படிப்பட்ட தலத்தில் பல ஆயிரம் வருடப் பழைமை கொண்ட ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்.

மதுரை - உசிலம்பட்டி சாலையில் பொட்டுலுப்பட்டி கிராமத்துக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனையூர். இந்த ஊரில் ஈசன் கோயில் கொண்ட வரலாறு மிகவும் பழைமையானது.

ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்

இந்திரனின் வாகனமான ஐராவதம் சாபம் பெற்றதன் காரணமாக பூவுலகம் வந்து இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது என்கிறது புராணம். ஒருநாள் அந்தக் காட்டுவழியாக வந்த மக்கள் சிலர் வெள்ளையானை ஒன்று குளத்தில் இறங்கித் தாமரை மலர்களைப் பறிப்பதையும் பின் அதைச் சுமந்து காட்டுக்குள் சென்று வருவதையும் கண்டனர்.

இந்தச் செய்தியை தம் மன்னனிடம் தெரிவித்தனர் மக்கள். அதை அறிந்த மன்னன் அந்தக் கற்றாழைக் காட்டுக்குள் நுழைந்து என்ன இருக்கிறது என்பதை அறிய உத்தரவிட்டான். அதன்படி வீரர்கள் அந்தக் காட்டைச் சுத்தம் செய்து உள்நுழைந்தபோது அங்கே சுயம்புவாக லிங்க மூர்த்தம் இருப்பதையும் அதற்குதான் யானை பூஜை செய்ததையும் கண்டறிந்து மன்னனிடம் சொல்லினர்.

ஐராவதம் தனக்கு சாப விமோசனம் தந்த கருணாமூர்த்தியான அந்த இறைவனை மக்களுக்கு அடையாளம் காட்டிச் செல்லவே மக்களின் கண்களில் பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் அறிந்துகொண்டு அங்கே வழிபாடுகள் செய்யத் தொடங்கினர்

ஆதியில் இந்தத் தலத்துக்கு, 'திருக்குறுமுல்லூர்' என்றும், சுயம்பு மூர்த்தியான இங்குள்ள மூலவருக்கு, 'ஸ்ரீஅக்னீஸ்வரமுடையார்' என்றும் ‘ஐராவதீஸ்வரர்’ என்பதும் திருநாமம். ஐராவதம் என்னும் யானை வழிபாடு செய்தவூர் என்பதால் ஊருக்கும் ஆனையூர் என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது.

பாண்டிய மன்னர்கள், சோழ அரசர்களான ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் நாயக்க அரசர்கள் என்று பலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்

மேற்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோயில். இதன் தெற்கே குளமும், வடக்கில் கண்மாய் ஒன்றும் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைகிறோம். முன்மண்டபம் தாண்டியதும் கருவறை வாசலின் இருபுறமும் துவார பாலகர்கள்.

தவிர, விநாயகர் மற்றும் முருகன். கருவறைக்குள் சுயம்பு லிங்கத் திருமேனியராக திருவருள் புரிகிறார் ஸ்ரீஐராவதீஸ்வரர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே, அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமீனாட்சியம்மன்.

பரிவாரத் தெய்வங்களாக பைரவர், இரட்டை விநாயகர்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நந்திதேவர், ஜேஷ்டாதேவி மற்றும் அஞ்சனா தேவி- ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

இத்தலம் அனுமனின் அவதாரத்தோடு தொடர்புடையது என்று சொல்கிறார்கள். எனவே இத்தல ஆஞ்சநேயர், அஞ்சனா தேவி, விஸ்வகர்மா இவர்களை வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள்.

ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று, ஸ்ரீஐராவதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் ஸ்ரீமீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தின் முதல் வாரத்திலும் ஆடி மாதம் கடைசி வாரத்திலும் பிரதோஷ வழிபாட்டின்போது சூரியக் கதிர்கள், ஸ்ரீஐராவதீஸ்வரர் மீது விழுந்து பூஜிப்பது, கண்கொள்ளாக் காட்சி.

புராணப் பெருமைவாய்ந்த இந்தத் தலத்திலிருந்து மண் எடுத்துச் சென்றுதான் மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டினார்கள் என்கிறது தலவரலாறு. அந்த வகையில் இதுதான் ஆதி மீனாட்சி அம்மன் கோயில் என்றும் சொல்கிறார்கள். இங்கு வேண்டிக்கொள்ளும் யாவும் நிறைவேறுகிறது என்பது நம்பிக்கை.

இந்த ஐராவதீஸ்வரரை வணங்கி வழிபட்டால் தொல்லைகள் தீரும். திருமண வரம் வேண்டுபவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்கிறார்கள் ஆனையூர் பொதுமக்கள்.

மதுரையைச் சுற்றியிருக்கும் சிவத் தலங்களைத் தேடிச் சென்று தரிசிப்பது மிகவும் விசேஷம். அப்படிப்பட்ட தலங்களில் ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியமானது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வரம். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: ஆயுள் பலம் அருளும் மிருத்யுஞ்ஜய அர்ச்சனை!

சிவாலயம் என்றாலே நந்தி பகவான் நிச்சயம் கோயில்கொண்டிருப்பார். நந்தி மாறுபட்ட திருக்கோலத்தில் இருப்பதைத் தரிசித்திருக்கிறோம். ஆனால் அவரே வராஹ வடிவில் இருப்பதைக்காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்தின் தென்... மேலும் பார்க்க

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், நின்ற நாராயண பெருமாள்: 5 தேவியருடன் பெருமாள் அருளும் அற்புதத் தலம்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்புப் பெற்றவை. அத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருதலம் தான் திருத்தங்கள். பெருமாள் சயன கோலம்,... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்: சாபங்கள் தீர்க்கும் பிருஹத் சனீஸ்வரர் சந்நிதி!

சுவாமி அட்சயபுரீஸ்வரர் என்று அருளும் தலங்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன. இப்படிப்பட்ட தலங்களில் வழிபட்டால் நம்மிடம் இருக்கும் தனம் தான்யம் ஆகியன பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. வாருங்கள் சுவாமி அட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்: தலைமுறைகள் செழிக்க அருளும் ஈசன்!

பெருமாள் என்றதும் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது சங்கு சக்கரமே. அதிலும் பெருமாள் வைத்திருக்கும் சங்குக்குப் பாஞ்சசன்யம் என்பது பெயர். அந்த அற்புதமான சங்கை பெருமாள் ஈசனை வழிபட்டுப் பெற்றதலம் ஒன்று உண... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன்... பேச்சுத் திறன் சாவல் உடையவர்களுக்கான தலம்!

கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. சில தலங்கள் சென்று வழிபட்டால் சொந்த வீடு கிடைக்கும் என்பார்கள். சில தலங்கள் திருமணகூடிவர... சில தலங்கள் கடன் பிரச்னை தீர... சில ஆரோக்கியம் உண்டாக எனப் பல்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம், நட்டாற்றீஸ்வரர் கோயில்: அகத்தியர் பிரதிஷ்டை செய்த அருள் தரும் ஈசன்

அகத்தியர் வழிபட்ட கோயில்கள் பல ஆயிரம் உள்ளன. அங்குள்ள ஈசனுக்குப் பெரும்பாலும் அகத்தீஸ்வரர் என்பதுதான் திருநாமம். அப்படி அகத்தியர் வழிபட்ட அற்புத மகிமை உடைய ஒரு கோயில்தான் ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்... மேலும் பார்க்க