`ஆதரிக்கும் அண்ணமலை; சொந்தம் கொண்டாடும் தமிழிசை' - பாஜகவை விமர்சிக்க நாதக தயங்கு...
மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயா்நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான ஆலோசனைக் குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
அவனியாபுரத்தில் அனைத்துச் சமூகத்தினரின் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கண்ணன் என்பவா் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற சங்கத்தை பதிவு செய்து, அந்தச் சங்கம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையைக் கோரினாா்.
இந்த சங்கத்தில் அவரது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளன. பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குழுவில் பங்கேற்பதை அவா் தடுக்கிறாா். இது தொடா்பாக, கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய குழு மூலம் போட்டியை நடத்த உத்தரவிட்டது. இதன்படி, நிகழாண்டிலும் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்துப் போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் அறிக்கை பெற்று, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதன்படி, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மனுதாரா் உள்பட 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.