"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ...
மது + எலி மருந்து: சத்தமே இல்லாமல் 4 மாதத்தில் 8 பேரை கொலை செய்த கொலைகாரன்!
சத்தீஷ்கர் மாநிலம் பலோடபஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே என்ற கிராமத்தில், துப்பாக்கிச் சூடு, அலறல் அல்லது இரத்தக்களரி இல்லாமல் அடுத்தடுத்து மரணங்கள் நடந்து கொண்டே இருந்தது. பல மாதங்களாக, கார்வேயில் ஆண்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து கொண்டே இருந்தனர். பிப்ரவரியில் ஒரு மரணம், அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு, மார்ச், ஏப்ரல் மற்றும் மே வரை ஒவ்வொருவராக இறந்து கொண்டே இருந்தனர்.
மர்மமான முறையில் தொடர்ச்சியாக நடக்கும் இந்த மரணங்கள் குறித்து கடந்த 6 ஆம் தேதி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போலீஸாரை அணுகி 4 மாதத்தில் எட்டு ஆண்கள் இறந்துவிட்டனர் என்று புகார் செய்தனர்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடலில் விஷம் கலந்து இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இச்சோதனை நடத்தப்பட்டது. போலீஸாரும் கார்வே கிராமத்திற்கு சென்று இறந்தவர்கள் கடைசியாக யாருடன் இருந்தார் என்பது குறித்த விபரங்களை சேகரித்தனர்.
இறந்த அனைவரும் இறப்பதற்கு முன்பு கடைசியாக அதேகிராமத்தில் கடை வைத்திருக்கும் ராம் சஹாய் என்பவருடன் இருந்ததாக பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். அதோடு ராம்சஹாய் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் எலிகளை கொல்ல வேண்டும் என்று கூறி பவுடர் வாங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து ராம் சஹாயை அழைத்துச்சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஆரம்பத்தில் தனக்கு இக்கொலையில் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார்.
ராம்சஹாய் கடைசியாக ஏப்ரல் 14ம் தேதி கார்த்திக் என்பவருக்கு மது வாங்கிக்கொடுத்தார். மது குடித்த சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டனர். இந்த சம்பவம் தான் ராம்சஹாய் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. ராம் சஹாயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் 8 பேரை ஒருவர் பின் ஒருவராக மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' மதுவில் எலி மருந்து பவுடரை கலந்து கொடுத்து இக்கொலைகளை செய்துள்ளார். முதன் முதலில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொலையை செய்தார். ராம்சஹாயிடம் அடிக்கடி மது வாங்கிக்கொடுக்கும்படி கூறி தொல்லை கொடுத்துகொண்டிருந்த நபருக்கு மதுவில் அந்த பவுடரை கலந்து கொடுத்து கொலை செய்தார். இக்கொலைக்கு முன்பு நாய் ஒன்றுக்கு சாப்பாட்டில் போராக்ஸ் பவுடரை கலந்து கொடுத்து சோதித்துள்ளார். அதில் நாய் இறந்துள்ளது. அதனை தொடர்ந்தே அதே பவுடரை பயன்படுத்தி இக்கொலைகளை செய்ய ஆரம்பித்தார். கொலைக்கான காரணங்கள் மிகவும் சிறியவையாகவும், தனிப்பட்டதாகவும் இருந்தது.
சிறிய மற்றும் தனிப்பட்ட பழைய தேர்தல் தகராறுகள், பொது அவதூறுகள், வாய்மொழி துஷ்பிரயோகம், அவரது மனைவி சம்பந்தப்பட்ட சந்தேகங்கள், சூனியம் பற்றிய மூடநம்பிக்கை, நிலத் தகராறு மற்றும் 50,000 ரூபாய் கடன் பிரச்னை போன்ற காரணங்கள் இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கொலை செய்த பிறகு தலைமறைவாகவில்லை. மாறாக கொலை செய்யப்பட்டவர் வீட்டிற்கு சென்று துக்கக் கூட்டத்தில் கலந்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்''என்று தெரிவித்தனர். ராம் கைது செய்யப்பட்ட பிறகுதான் அக்கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இப்போது யாராவது மது வாங்கிக்கொடுத்தால் கூட குடிக்க தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.


















