நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; ...
மத்திய அமைச்சரவையின் முதல் தமிழகப் பெண்! - காந்திகிராமம் தந்த மாபெரும் ஆளுமையின் தியாக வரலாறு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மருத்துவர்.சௌந்தரம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்னும் கிராமத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற டி.வி.எஸ் குழுமத்தின் நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மற்றும் சமூக சேவைகளில் ஆர்வம் கொண்ட லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாக பிறந்தார். ஐந்து சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் சௌந்தரம் மிகுந்த பாசத்துடனும் மகிழ்ச்சியாகவும் வளர்ந்தார்.

ஆரம்பக் கல்வியைத் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள ஒரு பாரம்பரிய பாடசாலையில் தொடங்கிய சௌந்தரம், புகழ்பெற்ற இசைக்கலைஞர் முத்தையா பாகவரிடம் வீணை மற்றும் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டு, தனது பத்தாவது வயதிலேயே இக்கலைகளில் தேர்ச்சி பெற்றார். பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
1918-ஆம் ஆண்டு, தனது 14-ஆம் வயதில் குடும்ப வழக்கப்படி சௌந்தரம், முற்போக்கு சிந்தனை கொண்ட மருத்துவர்.சௌந்தரராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சௌந்தரத்தின் கல்வி ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவரைத் தொடர்ந்து படிக்க சௌந்தரராஜன் ஊக்கமளித்தார். 1925-ஆம் ஆண்டு மதுரையில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்.சௌந்தரராஜன் அதே பிளேக் நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார். அவர் இறக்கும் தருவாயில் தன் இளம் மனைவி சௌந்தரத்திடம், "நீ கண்டிப்பாக ஒரு மருத்துவராகி மக்கள் சேவை செய்ய வேண்டும்; மறுமணமும் செய்து கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
கணவரின் மறைவுக்குப் பின், 1928-ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சௌந்தரம் கடுமையான உழைப்பிற்குப் பின், 1936-ஆம் ஆண்டு தனது மருத்துவப் பட்டத்தைப் பெற்று மருத்துவரானார்.

டெல்லியில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த போது, மகாத்மா காந்தியின் தனி மருத்துவரான சுசீலா நய்யார் மூலமாக காந்தியைச் சந்தித்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தனக்கு ஆசை உள்ளதாக கூறிய சௌந்தரத்திடம், "முதலில் உன் மருத்துவப் படிப்பை முடி, பிறகு நாட்டுச் சேவைக்கு வா" என்று அறிவுறுத்தினார் காந்தி.
படிப்பை முடித்ததும் வார்தாவிலுள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் சேர்ந்த சௌந்தரம், தன் கைகளாலேயே ஆசிரமக் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் அளவிற்குத் தன்னை ஒரு தீவிர காந்தியவாதியாக மாற்றிக்கொண்டார். நூல் நூற்கக் கற்றுக்கொண்ட அவர், எளிய கதர் ஆடைகளை உடுத்த தொடங்கினார்.
டெல்லியில் மருத்துவம் பயின்ற சௌந்தரத்திற்கு, அங்கு தீவிர காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான கேரளாவைச் சேர்ந்த ஜி.ராமச்சந்திரனின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்த இவர்களது காதலுக்குச் சௌந்தரத்தின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1940-ஆம் ஆண்டு வார்தா ஆசிரமத்தில் இவர்களது சாதி மறுப்பு மறுமணத்தை காந்தியடிகளே நடத்தி வைத்தார்.
திருமணத்திற்குப் பின் மருத்துவரான சௌந்தரம் தம்பதியர் தங்களின் இல்லற வாழ்க்கையை வெறும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல், நாட்டுச் சேவைக்காகவே அர்ப்பணித்தனர். 1947-ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகே இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க 'காந்திகிராமம்'.
மருத்துவர்.டி.எஸ்.சௌந்தரத்தின் தொழில் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின்படி முழுக்க முழுக்க ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பாகவே அமைந்தது. டெல்லியில் மருத்துவப் பட்டம் பெற்றவுடன், சென்னைக்குத் திரும்பி தனது மருத்துவத் தொழிலைத் தொடங்கிய மருத்துவர்.டி.எஸ்.சௌந்தரம், ஏழை எளிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, பணம் வாங்காமல் இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கினார்.

காந்தியின் மனைவி கஸ்தூரிபாயின் மறைவுக்குப் பின், பெண்களின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநிதியாக சௌந்தரத்தைக் காந்தியே நேரடியாக நியமித்தார். இதன் மூலமாகத் தனது இறுதி மூச்சு வரை விடுதலைப் போராட்டக் கொள்கைகளையும் சமூகச் சீர்திருத்தங்களையும் கிராமப்புறங்களுக்குக் கொண்டு சேர்த்தார்.
சென்னையில் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து, ஆதரவற்ற பெண்களுக்கான 'அவ்வை இல்லம்' மற்றும் கிராமப்புற மக்களுக்கான 'அவ்வை நல்வாழ்வு மையம்' ஆகியவற்றைத் தொடங்கி நடத்த உதவினார். 1939 ஜூலை 8 அன்று, தியாகி ஏ.வைத்தியநாத ஐயருடன் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்த சமூகக் கொடுமைக்கு எதிராகச் சௌந்தரம் கக்கன் உள்ளிட்ட ஆறு பேரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் முதன்முறையாக அழைத்துச் சென்றார்.
1942-ல் காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தனது கணவர் ஜி. ராமச்சந்திரனுடன் இணைந்து மதுரையில் பெண்களை பெருமளவில் ஒன்றுதிரட்டி, அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார்.
1947-ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் இரண்டு படுக்கைகளுடன் ஒரு சிறிய மருத்துவக் கூடத்தைத் தொடங்கினார். சின்னாளப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏழைப் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு டி.எஸ்.சௌந்தரமே நேரில் சென்று பிரசவம் பார்த்தார். இவரது அயராது உழைப்பால் அந்தச் சிறிய மருத்துவக் கூடம் இன்று 220-க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட நவீன வசதிகள் கொண்ட கஸ்தூரிபா மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்க 1956-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற தொழில் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த தொழில் பயிற்சி மையம் பின்னர் மத்திய அரசால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டபோது, அதன் முதல் வேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட, மருத்துவர்.டி.எஸ்.சௌந்தரம் 1980-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டார்.

பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகக் காந்திகிராமத்தில் நூற்பு, நெசவு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அச்சுக்கூடம் போன்றவற்றைத் தொடங்கி தொழில் முனைவோராக உருவெடுக்க சுயதொழில் பயிற்சி வழங்கினார்.
1952--ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் 1967-ஆம் ஆண்டு வரை திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த போது, தொடக்கக் கல்வியை இலவசமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டார். இவரே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் தமிழகப் பெண்.
தன்னுடைய அரசியல், மருத்துவ செல்வாக்கை நாட்டின் விடுதலைக்காகவும், சாதி, தீண்டாமை ஒழிப்பிற்காகவும் முழுமையாகப் பயன்படுத்திய மிகச்சில பெண் தலைவர்களில் மருத்துவர்.சௌந்தரம் முதன்மையானவர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

















