நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் வி...
மருந்து தட்டுப்பாடு: புற்றுநோய் மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி!
தற்போது இந்தியாவில் நிலவி வரும் கடுமையான மருந்து தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அத்தியாவசியமான நான்கு மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு கொள்கைய அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புற்றுநோய் சிகிச்சைக்கான இரண்டு முக்கிய கீமோதெரபி மருந்துகளும் அடங்கும்.
பின்னணியும் தட்டுப்பாட்டுக்கான காரணமும்
இந்தியாவில் நுரையீரல், மார்பகப் புற்றுநோய் மற்றும் வாய்வழி புற்றுநோய்களுக்கு ‘சிஸ்பிளாட்டின்’ (Cisplatin) மற்றும் ‘கார்போபிளாட்டின்’ (Carboplatin) ஆகிய பிளாட்டினம் சார்ந்த மருந்துகள் முதற்கட்ட சிகிச்சையாக (First-line treatment) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு வாரியத்தின் (NPPA) கீழ் இந்த மருந்துகளின் உச்ச வரம்பு விலை கட்டுப்படுத்தப்படுவதால், நிறுவனங்களால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விலையை உயர்த்த முடியும். ஆனால், சமீபத்திய மேற்காசிய நெருக்கடி நிலை மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்பால், இந்த மருந்துகளுக்குத் தேவையான மூலப்பொருளான பிளாட்டினத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், இறக்குமதி வரி மற்றும் நாணய மதிப்பு மாறுபாடுகளால் உற்பத்திச் செலவு அதிகரித்தது. உற்பத்திச் செலவு விற்பனை விலையை விடக் கூடியதால், நஷ்டத்தைத் தவிர்க்க மருந்து நிறுவனங்கள் இவற்றின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகள் இந்தத் தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளன. தகுந்த நேரத்தில் கீமோதெரபி சிகிச்சை அளிக்க முடியாததால், நோயாளிகளின் சிகிச்சையைத் தள்ளி வைக்கவும், மருந்துகளைப் பெற மாநிலம் விட்டு மாநிலம் அலைந்து திரியவும் வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த இக்கட்டான பொதுசுகாதாரச் சூழலை எதிர்கொள்ள, மத்திய மருந்துத் துறை ஜூன் 7-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம், விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நிறுவனங்கள் வழங்கிய மூலப்பொருள் தரவுகளின் அடிப்படையில், முந்தைய விலையிலிருந்து 10% முதல் 50% வரை விலையை உயர்த்த NPPA-வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் 'சிஸ்பிளாட்டின்', 'கார்போபிளாட்டின்' ஆகிய இரண்டு கீமோதெரபி மருந்துகள் மற்றும் இரண்டு ஆன்டி-டெட்டனஸ் (Anti-tetanus) தடுப்பூசிகள் என மொத்தம் நான்கு மருந்துகளின் விலை உயரவுள்ளது. மருந்து உற்பத்தியை மீண்டும் தொடங்கி தட்டுப்பாட்டைப் போக்குவதே இதன் நோக்கமாகும். மேலும், விலை திருத்தம் கோரியுள்ள மற்ற 78 மருந்துகளின் விவரங்களையும் அரசு தற்போது பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.












