செய்திகள் :

`முக்கோண' ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?

post image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரம், அவிநாசி ஆகிய இரண்டு தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இதில், அதிமுக-வின் கோட்டையாக அவிநாசி தொகுதி கருதப்படும் நிலையில், தாராபுரம் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது.

1951-இல் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், திமுக-வுடன் கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

திமுக-வின் லேடீஸ் சென்டிமென்ட்:

1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பார்வதி என்ற பெண் வேட்பாளர் முதன் முதலில் தாராபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் திமுக-வைச் சேர்ந்த பழனியம்மாள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். அதிலிருந்து, திமுக தலைமை தாராபுரம் தொகுதியை சென்டிமென்ட் அடிப்படையில் பெண்களுக்கே ஒதுக்கி வருகிறது.

1989 தேர்தலில் சாந்தகுமாரி, 1996 தேர்தலில் சரஸ்வதி, 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக வேட்பாளர் சிவகாமி, 2006- தேர்தலில் பார்வதி, 2021 தேர்தலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் என தொடர்ச்சியாக பெண்களை நிற்க வைத்து தாராபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திமுக லேடீஸ் சென்டிமென்ட்டுக்கும் இடையில் 1977-இல் தொடங்கி 1984 வரை தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று தேர்தல்கள் மற்றும் 1991, 2011 தேர்தல்களில் அதிமுக ஆண் வேட்பாளர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 2026 தேர்தலில் தாராபுரம் தொகுதியை திமுக-வில் ஆண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு ஏற்றார்போல், தற்போதைய தாராபுரம் எம்எல்ஏ-வும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் ஒருபுறமும், மறுபுறம் மாநிலங்களவை எம்.பி.யும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் மற்றொருபுறமும் தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன் என போட்டி போட்டுக் கொண்டு சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர்.

காய் நகர்த்தும் கயல்விழி

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், "தனித் தொகுதியில் அவிநாசி எப்படி அதிமுக-வின் கோட்டையோ அதேபோல் மற்றொரு தனித் தொகுதியான தாராபுரம் திமுக-வின் கோட்டையாக உள்ளது. தாராபுரத்தில் நின்றால் வெற்றி உறுதி என்பதால் மீண்டும் சீட்டை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். மீண்டும் வெற்றி பெற்றால் சீனியர் அமைச்சராகி விடலாம் என திட்டமிடும் அமைச்சர் கயல்விழியின் கணவர் செல்வராஜ் அதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறார்.

திராவிடர் கழகத்தில் இருந்த செல்வராஜ், கி.வீரமணியுடனான நெருக்கத்தை வைத்து தனது மனைவி கயல்விழிக்கு கடந்த 2021 தேர்தலில் சீட்டை பெற்றதுடன், அமைச்சர் பதவியையும் பெற்றார். இந்த முறை தாராபுரம் தொகுதியை பெண்களுக்கென்று திமுக தலைமை மீண்டும் ஒதுக்கினால் தனது மனைவி கயல்விழிக்கும், ஆண்களுக்கென்று ஒதுக்கினால் தனக்கும் எப்படியாவது சீட்டை பெற்றுவிட வேண்டுமென்று நினைக்கிறார் செல்வராஜ்.

அதற்காக இப்போதிருந்தே இருந்தே கி.வீரமணி ரூட்டிலும், அமைச்சர் சக்கரபாணி வைத்தும் காய்களை நகர்த்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கயல்விழி செல்வராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதால் உள்கட்சி அளவிலும் தனக்கு ஆதரவு இருப்பதை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

மு.பெ.சாமிநாதன்

இதுஒருபுறம் இருக்க கயல்விழி செல்வராஜ் மீண்டும் வெற்றி பெற்று வந்தால், சீனியர் அமைச்சர் அந்தஸ்த்து கொடுக்க வாய்ப்புள்ளது. அப்போது, தனக்கான அரசியலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நினைப்பதால், கயல்விழியை அவர் பரிந்துரைக்க மாட்டார் என்கிறார்கள். அதற்குப் பதிலாக தனது தீவிர விசுவாசியான தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன்தான் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது. மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணியோ, மு.பெ.சாமிநாதனின் துணைப் பொதுச் செயலாளராக இருப்பதால், இறுதியில் அவர் யாரைக் கை காட்டுகிறாரோ அவரை பரிந்துரைத்துவிடலாம் என நினைக்கிறார்" என்கின்றனர் விரிவாக.

தலைமையை நெருங்கும் பாப்புக்கண்ணன்:

தற்போது தாராபுரம் நகர்மன்றத் தலைவராக இருக்கும் பாப்புக்கண்ணனும் தாராபுரம் தொகுதியை கைப்பற்ற வேண்டுமென தீவிரம் காட்டி வருகிறார். அவர் சார்ந்த சமூக மக்கள் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அதை பலமாக வைத்து சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார். மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தீவிர ஆதரவாளராக பாப்புக்கண்ணன் இருந்தாலும், அவருக்கு எதிராக தாராபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர். இருந்தாலும், மு.பெ.சாமிநாதன் பரிந்துரைத்துவிட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் பாப்புக்கண்ணன் களத்தில் இறங்கியுள்ளார்.

பாப்புகண்ணன்

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் கே.என்.நேரு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் மூலமும் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் பாப்புக்கண்ணன். நகர்மன்றத் தலைவராக இருப்பதால் துறை அமைச்சர் என்ற ரீதியில் கே.என்.நேருவிடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். தலைமைக்கு நெருக்கமாக வேண்டும் என்பதற்காகவே, அண்ணா அறிவாலத்தில் பல லட்சம் செலவில் உயர்மின் கோபுரத்தை தனது சொந்த செலவில் பாப்புக்கண்ணன் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அடிக்கடி சென்னை சென்று தலைமையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். புதுமுகம், பெரிய குற்றச்சாட்டுகள் இல்லாதது மற்றும் அவர் சார்ந்த சமூக வாக்குகள் பலம், தற்போதைய எம்எல்ஏ கயல்விழி செல்வராஜ் மீதான அதிருப்தி மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பரிந்துரை பாப்புக்கண்ணனுக்கு பிளஸாக மாறும் என்கின்றனர் விவரம் அறிந்த திமுக நிர்வாகிகள்.

குறிவைக்கும் அந்தியூர் செல்வராஜ்:

இதுகுறித்து பேசிய திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், "ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானிசாகர் தனித் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்துக்குள் வரும் அவிநாசி தொகுதியும் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகள் என்பதால், வெற்றி பெறுவது மிக கடினம். இதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிமுள்ள தாராபுரம் தொகுதியை அந்தியூர் செல்வராஜ் குறி வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தாராபுரம் தொகுதியில் தான் சார்ந்த அருந்ததியர் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பதாலும், திமுக-வுக்கு அந்த தொகுதியில் ஏற்கெனவே இருக்கும் பலத்தால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என அந்தியூர் செல்வராஜ் நினைக்கிறார்.

அந்தியூர் செல்வராஜ்

அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச் செயலாளராக இருப்பதால் அவர் தாராபுரம் தொகுதி கேட்டால் கட்சித் தலைமை பரிசீலிக்க வாய்ப்புகள் அதிக உள்ளது. அதேவேளை மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனும் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். அந்தியூர் செல்வராஜும் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். ஒருவேளை அவருக்கு சீட் கொடுத்து வெற்றி பெறும்பட்சத்தில் இருவரில் யாராவது ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது. அதனால், தனது அரசியலுக்கு ஆபத்து வந்துவிடும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நினைப்பதால், அந்தியூர் செல்வராஜை அவர் பரிந்துரைக்க வாய்ப்புகள் மிக குறைவு.

இருந்தாலும், தாராபுரம் தொகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் அந்தியூர் செல்வராஜ் அண்மைக்காலமாக தலைகாட்டத் தொடங்கியுள்ளார். அண்மையில் தாராபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அந்தியூர் செல்வராஜ் பேசினார். தாராபுரத்துக்குள் அந்தியூர் செல்வராஜ் தலை காட்டுவதை அமைச்சர் கயல்விழி செல்வராஜும், அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் விரும்பவில்லை என்கின்றனர்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன் இடையிலான சீட் ரேஸ், அந்தியூர் செல்வராஜின் வருகை ஆகியவற்றால் தாராபுரம் திமுக பரபரப்பாகி உள்ளது.!

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்... மேலும் பார்க்க

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் ... மேலும் பார்க்க

4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க

``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகள... மேலும் பார்க்க

FTA: இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained

ஒப்பந்தப் பேச்சுவார்த்தை... வர்த்தகப் பிரச்னை... வரி விதிப்பு... என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் முறுக்கிக் கொண்டு இருக்க... இன்னொரு பக்கம், இந்தியா வெற்றிகரமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சி... மேலும் பார்க்க