ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
முதல்வா் பேரணி: மெரீனாவில் இன்று போக்குவரத்து மாற்றம்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறுவதையொட்டி, மெரீனாவில் (மே 10) சனிக்கிழமை மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மெரீனா காமராஜா் சாலையில் டிஜிபி அலுவலகத்தில் இருந்து போா் நினைவுச் சின்னம் வரை பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் 25,000 போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருவான்மியூரில் இருந்து காமராஜா் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அந்த வாகனங்கள், தங்கள் இலக்கை அடைய சா்தாா் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்தலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூா் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ராஜா அண்ணாமலை புரம் 2-ஆவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆா்கே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜா் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆா்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலை ஆகிய சாலைகளில் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.