முதல் நாள் ராத்திரி விருது; விடிஞ்சா மகள் பிறக்கிறா... - அஸ்வின் கார்த்திக் செம ஹேப்பி
'சரவணன் மீனாட்சி' 'வானத்தைப் போல' 'அரண்மனைக் கிளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அஸ்வின் கார்த்திக். ஆரம்பத்தில் தொகுப்பாளராக டிவியில் நுழைந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர்.
சீரியல்களில் நெகடிவ் ரோல்களுக்குப் பெரும்பாலும் முக்கியத்துவம் தந்து வருகிறார். தற்போது 'அன்னம்' தொடரில் நடித்து வருகிறார்.
இவருக்கு மேக் அப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காயத்ரி தாய்மை அடைந்தார். இந்தத் தகவலை சமூக வலைதளங்கள் வழியே சொல்லியிருந்த அஸ்வின் கார்த்திக் பெண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
உற்சாகத்தில் இருந்த கார்த்திக்கைத் தொடர்புகொண்டு வாழ்த்து சொல்லிப் பேசினோம்.
''ஆமா சார், என்னோட ஆசை பெண் குழந்தை வேணும்னுதான் இருந்தது. இதுவாச்சும் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற பொதுவான ஆசைதான். ஆனா என் மனைவியும் என்னை மாதிரியே பொண்ணுக்குத்தான் ஆசைப்பட்டாங்க. எதிர்பார்த்த மாதிரியே மக வந்துட்டா. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதுவும் சிசேரியன் ரொம்பவே சகஜமாகிவிட்ட இந்தக் காலத்துல நார்மல் டெலிவரியில் பிறந்திருக்கா' என்றவரிடம்,
'இப்ப விருது வாங்கியிருக்கீங்களே, அதுக்கும் வாழ்த்துக்கள்' என்றதும், 'பாருங்க, பொண்ணு வந்த சந்தோஷத்துல அந்த விஷயத்தையே மறந்துட்டேன்' என்றபடி தொடர்ந்தார்..
'இப்ப 'அன்னம்' தொடர் மட்டும்தான் போயிட்டிருக்கு. இந்த சீரியலுக்குமே தொடங்கின சில நாட்களிலேயே மக்கள் கிட்ட இருந்து நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு. கூடுதல் மகிழ்ச்சியா இந்தாண்டு குடும்ப விருதுகள்ல எனக்கும் விருது கிடைச்சிருக்கு. அதுல என்ன ஹைலைட் பாருங்க, முதல் நாள் இரவு விருது அறிவிக்கிறாங்க, மறுநாள் பொறந்தா பாப்பாவும் வர்றா.. யாருக்கு கிடைக்கும் இப்படியொரு அதிர்ஷ்டம்'? -ரொம்பவே உற்சாகத்துடன் முடித்தார் அஸ்வின்.
வாழ்த்துகள் அஸ்வின்!