செய்திகள் :

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'.

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது.

எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது.

அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை

ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர்.

மோடி

நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும்.

பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது.

இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும்.

இனியன் ராபர்ட்
இனியன் ராபர்ட்

ரஷ்யாவின் பங்களிப்பு..!

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன.

‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்!

இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம்.

மோடி, ட்ரம்ப்

இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது.

முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும்.

அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது.

இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.!

(தொடரும்..)

`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video

2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ... மேலும் பார்க்க

வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏ... மேலும் பார்க்க

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க