Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி' சீரியலுக்கான அ...
`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video
2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறார்.
அந்தச் சுழலின் காரணமாக மூன்றாவது நாளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் முடங்கின. நேற்று முன்தினம் ராகுல் அந்தப் புத்தகம் குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையை வைத்துப் பேச முயன்றார். அவர் பேசத் தொடங்கியதுமே பாஜக-வினர் பெரும் அமளியில் ஈடுபட, வெளியே வந்த ராகுல், `அந்தப் புத்தகம் குறித்தும், அதிலிருக்கும் வரி குறித்து நிச்சயம் பேசுவேன். அதற்கு தான் அவர்கள் பயப்படுகிறார்கள்' எனக் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம், ராகுல் காந்தியை பேச விடாமல் தடுத்ததாகக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி-க்கள் கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். அப்போது சபாநாயகரை நோக்கி காகிதங்களை கிழித்து வீசியிருக்கின்றனர். அதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் உட்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தொடர் முழுக்க பங்கேற்க தடை விதிக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகைய சூழலில் இன்றும் `சீன ஊடுருவல்' விவகாரத்தை ராகுல் பெரிதாக்க, அவை ஒத்திவைக்கப்பட்டது. வெளியே வந்தவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, `பிரதமருக்கு இந்தப் புத்தகத்தை வழங்குவேன். அவர் படிக்கட்டும். மக்களுக்கு உண்மை தெரியட்டும்' என்றார்.
PM is Compromised
முன்னதாக அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மக்கர் துவாரில் (Makar Dwar) ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் `PM is Compromised' என்ற பேனரைக் கையிலேந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திய இணை அமைச்சர் (ரயில் போக்குவரத்து துறை மற்றும் உணவு உற்பத்தித் துறை) ரவ்நீத் சிங் பிட்டு (மாநிலங்களவை உறுப்பினர்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் மற்றும் காங்கிரஸாரை நோக்கி, `ஏதோ கார்கில் போரை வென்றுவிட்டு வந்திருக்கிற மாதிரி' எனக் கூறி, கடந்திருக்கிறார். உடனே ராகுல், `இதோ ஒரு துரோகி நடந்து வருகிறார். அவர் முகத்தைப் பாருங்கள்' என சக கட்சியினரிடம் சொல்ல... அவர்கள் அனைவரும் ஆமோதித்து ஆரவாரம் செய்தனர்.
Heated words exchanged between Rahul Gandhi and Union Minister Ravneet Bittu at Parliament House @DeccanHeraldpic.twitter.com/UCZUPDO1y5
— Shemin (@shemin_joy) February 4, 2026
என்னுடைய துரோகி நண்பா!
அதைத் தொடர்ந்து ராகுல் ரவ்நீத் சிங் பிட்டுவை நோக்கி, `ஹலோ பிரதர். என்னுடைய துரோகி நண்பா. கவலைப்பட வேண்டாம், நீங்கள் சீக்கிரம் காங்கிரஸுக்குத் திரும்பி வந்துவிடுவீர்கள்' எனக் கூறி.... ஹேண்ட்ஷேக் செய்ய கையை நீட்டினார். ஆனால் ரவ்நீத் சிங் பிட்டு, அதைத் தவிர்த்துவிட்டு, `நாட்டை விற்றுவிட்டனர். தேஷ் கே துஷ்மன்' என்றபடி அங்கிருந்து கடந்து சென்றார்.
முன்னாள் காங்கிரஸ்காரர்
ரவ்நீத் சிங் பிட்டு தற்போது பாஜக-வில் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சரவையிலும் இருந்தாலும், அவர் முன்னர் காங்கிரஸில்தான் இருந்தார். 2021-ல் மக்களவை காங்கிரஸ் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார்.
முன்னாள் காங்கிரஸ்காரரான ரவ்நீத் சிங் பிட்டு - ராகுல் காந்தி இடையே நடந்த இந்த உரையாடல் தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.















