திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" - முத்தரசன் கா...
முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலமாக திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூருக்கு வந்தடைகிறது.
அதற்கு மேல் சரியான பாதை இல்லாத காரணத்தால் கலவை இயந்திரத்தில் டிராலி பொருத்தி யானைகள் மற்றும் மாடுகளை பயன்படுத்தி தேனி, கம்பம், கூடலூர் என 3000 அடி உயர மலையினை கடந்து தற்போது அணை இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை முழுக்கவே இந்த கலவை இயந்திரத்தை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. சுமார் 130 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த இயந்திரம் பென்னி குயிக் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்தது.
முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயமோ, அதே அளவிற்கு அந்த அணையை கட்ட பயன்படுத்தபட்ட இந்த கலவை இயந்திரத்தையும் பொக்கிஷமாகவே பார்த்தனர்.

பென்னி குயிக் வீட்டின் முன் உள்ள கலைவை இயந்திரத்தை கீழே கொண்டு வந்து அதனை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொன்மை மிக்க கலவை இயந்திரத்தை பயன்படுத்த முடியாத பொருள் என்று கடந்த வருடம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முல்லை பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, "அணையில் உள்ள பழமையான பொருள்கள் எவையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறதோ, அவற்றை வகைப்படுத்தி கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த கலவை இயந்திரமும். தற்போது இந்த இயந்திரம் இங்கு இல்லை. எடுத்து சென்று விட்டார்கள்" என்கிறார்கள்.
சரி, யாருக்கு ஏலம் விடப்பட்டது என கேட்ட போது
"அந்த விவரங்களை பார்த்து சொல்கிறேன்" " என்றார் முடித்துக்கொண்டார்.
கடல் கடந்து, மலைகள் கடந்து பயணப்பட்டு அணை கட்ட பயன்பட்ட ஒரு இயந்திரத்தை, அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு பழையான பொருளை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக வெளிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.













