அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
ரெஸ்டாரண்ட் கேஸ் கவுண்டரில் நாய்; `வாடிக்கையாளர்களை அதுக்கு நல்ல தெரியும்' - வைரலான நாயின் கதை
மும்பையின் தென்பகுதியில் இருக்கும் போர்ட் பகுதியில் பிரிட்டானியா அண்ட் கோ என்ற இரானி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெஸ்டாரண்டில் அங்கு இருக்கும் செல்லப்பிராணியான ஜுலு என்ற நாயை பார்க்கவே அதிகமான விருந்தினர்கள் வருகின்றனர்.
13 வயதாகும் ஜுலு, அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. அதோடு, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தனது வீட்டில் இருந்து வரும்போது ஜுலுவையும் கூடவே அழைத்து வருவார். ரெஸ்டாரண்டிற்கு வந்ததும் ஜுலு கேஷ் கவுண்டர் டேபிளில் ஏறி அமர்ந்து கொள்வது அதன் வழக்கம்.
பல ஆண்டுகளாக இந்த நாய் இவ்வாறு கேஷ் கவுண்டரில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நாய் மிகவும் பழக்கமாகிவிட்டது. அந்த வாடிக்கையாளர்களை ஜுலு “கை கொடுத்து” வரவேற்கிறது. வாடிக்கையாளர்கள் நாயின் தலையை தொட்டு சென்றுவிடுகின்றனர். யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் மிகவும் அமைதியாக இருப்பதுடன், உறக்கம் வந்தால் அப்படியே அதே இடத்தில் படுத்து உறங்கிவிடுகிறது.
சிலர் இந்த நாயை பார்ப்பதற்காக தினமும் ரெஸ்டாரண்ட் வந்து செல்கின்றனர். இது குறித்து ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் கூறுகையில், “ஜுலு இந்த ரெஸ்டாரண்டில்தான் வளர்ந்தது. அதனால் இங்கு வழக்கமாக வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஜுலுவிற்கு தெரியும். அது மிகவும் அமைதியாக ரெஸ்டாரண்ட் கேஷ் கவுண்டரில் அமர்ந்திருப்பதுதான் எங்களது அடையாளமாகிவிட்டது. அது உறங்கிக்கொண்டிருந்தாலும், விழித்திருந்தாலும் அனைவரையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும்,” என்றனர்.
வாடிக்கையாளர்கள் சிலர் அந்த நாயுடன் நின்று போட்டோ, செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
ஜுலுவுடன் வளர்ப்பு பூனை ஒன்றும் கேஷ் கவுண்டரில் இருக்கிறது. ஆனால் அந்த பூனை யாரையும் தன்னை தொடவிடாது. சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டிற்கு வந்த வாடிக்கையாளர் சேவியர் என்றவர் ஜுலுவை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதை பார்த்த ஒருவர், “தினமும் ஜுலுவை பார்த்துவிட்டுத்தான் அலுவலகம் செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


















