சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆ...
Stephen Review: அசத்தல் மேக்கிங் ஓகே; சீரியல் கில்லர் கதையில் இவற்றையும் கவனித்திருக்கலாமே?!
குறும்படத்திற்கான ஆடிஷனுக்கு வரும் பெண்களை ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பேசச் சொல்கிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). இவ்வாறு வருபவர்கள் வசனம் பேச, அவர்கள் இறுதி வசனத்தை அடையும் தருணத்தில் ஸ்டீபன் கத்தியை எடுத்து அவர்களைக் குத்த ஓடி வருவதாகக் காட்சி முடிகிறது. இந்நிலையில் ஒன்பது இளம்பெண்கள் காணவில்லை என்ற பரபரப்பான செய்தி வெளியாக, அவர்களைக் கடத்தியவனை போலீஸ் நெருங்குகிறது. அப்போது அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ எனக் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிறான் ஸ்டீபன். மனோதத்துவ நிபுணர்கள் அவனை விசாரிக்க இந்தக் குற்றத்தை அவன்தான் செய்தானா, அவனது குடும்பச் சூழல் என்ன, அவனது பின்னணி என்ன என்பதை உளவியல் த்ரில்லராகப் பேசுகிறது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஸ்டீபன்’.
அப்பாவியான முகபாவனை, அதைச் சட்டென அப்படியே மாற்றும் கொடூரப் பார்வை எனக் கணிக்க முடியாத ‘சைக்கோ’ பாத்திரத்தை லாகவமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர். குறிப்பாக ரத்தம் உறைந்த நிலையில் பிணங்களைப் பார்க்கும் காட்சியும், பால்கனியில் காவலர்கள் வருகிறார்களா என்று தேடும் இடமும் சிறப்பு. விசாரணை அதிகாரியாகப் படம் நெடுகப் பயணிக்கும் மைக்கேல் தங்கதுரை, மனோதத்துவ நிபுணராக வரும் ஸ்ம்ரிதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை. மனப்பிறழ்வு கொண்ட தந்தையாக வரும் வடிவேலு, தன் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து வெவ்வேறு உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். அடக்கி வைத்த உணர்வுகளை வெளிக்காட்டும் ‘மை சன்’ வசன இடத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் கண்டிப்பான தாயாக வரும் விஜயஸ்ரீ நடிப்பில் இதே எனர்ஜி மிஸ்ஸிங்! கையறு நிலையை வெளிப்படுத்தும் ஷிரிஷாவின் திரை நேரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.
ராட்சச சக்கரத்தில் அரூபமாகக் கொடுக்கப்பட்ட நியான் லைட்டிங், குறுகிய அறைக்குள் வைக்கப்பட்ட காட்சிக் கோணங்கள் ஆகியவற்றால் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் கிருஷ்ணா. இருப்பினும் பாடல் காட்சிகளின் மான்டேஜ்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே வசனத்தைப் பல பெண்கள் பேசும் இடத்தையும், விசாரணைக் காட்சிக்குள் குறுகலான பெட்டியில் போட்டோ எடுப்பதாகக் காட்சிகள் நகர்வதையும் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறது படத்தொகுப்பாளர்கள் மிதுன் - கார்த்திக் கூட்டணி. இருப்பினும் பிளாஷ்பேக் காட்சிகள் துண்டுதுண்டாக விரிவது எமோஷனைச் சிதைக்கிறது. ராகவ் ராயனின் இசையில் பாடல்கள் வேகத்தடையாகப் போகின்றன. ஆனால் அதைப் பின்னணி இசையில் சரிசெய்யப் பரபர விசாரணைக் காட்சிகளில் புதிர் தாளங்களைப் போட்டிருக்கிறார். குறியீடாக வரும் ராட்டினத்தில் கவனம் செலுத்திய கலை இயக்குநர் அமர் கீர்த்தி, ஸ்டீபனின் இல்லத்தை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம்.
எடுத்த எடுப்பிலேயே குற்றம் புரிந்தவன் தவற்றை ஒப்புக்கொண்டதாக ஆரம்பித்து, அதை அவன் செய்தானா இல்லையா என்கிற வகையில் உளவியல் ரீதியான த்ரில்லராகக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மிதுன். நமது பார்வையெல்லாம் ஒருவர் மேலிருக்க, அவரை மேலிருந்து கீழ் இறக்கி மற்றவரை மேலேற்றும் ராட்டின விளையாட்டை விளையாடியிருக்கிறது திரைக்கதை. முதலில் குடும்ப வன்முறை, குழந்தைப் பருவ அதிர்ச்சி ஆகியவை அதில் சுழன்றோடுகின்றன. ரோர்சாக் டெஸ்ட் (Rorschach Test) மூலம் போடப்படும் புதிர்களும், அதை அவிழ்க்க எடுக்கப்படும் முயற்சிகளும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றன. அதுபோல இன்னும் சில ஐடியாக்களைப் பிடித்திருக்கலாமே?! அதேபோல, தோட்டம் போல இருக்கும் இடத்தைக் காடு என்பதெல்லாம் போங்காட்டம் பாஸு!
இரண்டாம் பாதியில் எடிட்டிங்கில் காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், ஒரே ஒரு போலீஸ் மற்றும் மனோதத்துவ நிபுணர் மட்டுமே இத்தனை பெரிய வழக்கைக் கையாள்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை. அதிலும் இன்னொரு பெண் இருக்கிறாள் என்று கிறிஸ்தவ ஆலயம் நோக்கி நகரும் காட்சிகள் நம்பத்தன்மையைக் குறைக்கின்றன. மேலும் பின்கதையில் மிஸ்ஸாகும் எமோஷனைக் கவனித்திருக்கலாம். அது தீர்ப்பை நோக்கி நகரும் இடத்திற்கு இன்னுமே வலு சேர்த்திருக்கும். கணிக்க முடியாத, எதிர்பாராத இறுதிக் காட்சி என்றாலும் அது வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே எழுப்புகிறது. விடை தெரியாத கேள்விகளுடன் இரண்டாம் பாகத்துக்கான ஹின்ட் கொடுக்கும் கலாசாரம் இதிலும் தொடர்வது அயற்சியே!
முதன்மைக் கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பு, நல்ல மேக்கிங் ஆகியவற்றால் ஈர்க்கும் ‘ஸ்டீபன்’, எழுத்தில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் இன்னும் வலிமையான படமாகியிருக்கும்.


















