செய்திகள் :

அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு!

post image

தனது குக்கிராமத்தின் முதல் டாக்டரான பவளமுத்து (சரண்), நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான்.

ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழுவதும் ரவிக்கை போட்டதே இல்லை. இந்நிலையில் திருமணம் பேச ஜாஸ்மின் வீட்டார் அவர்கள் வீட்டிற்கு வரும் நாள் நெருங்குகிறது.

இதனால் ‘இப்படியொரு அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?’ எனப் பவளமுத்து தயங்க, அவனது அண்ணி சாரதாவுடன் சேர்ந்து அங்கம்மாளின் மனதை மாற்ற திட்டம் தீட்டுகிறார்கள்.

யார் இந்த அங்கம்மாள், அவர் மகனின் ஆசைப்படி ரவிக்கை போட்டுக்கொண்டாரா, இல்லையா என்பதை பிடிவாதமும் பாசமும் கலந்து சொல்லியிருக்கிறது படம்.

அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review
அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review

யாருக்கும் எதற்கும் அஞ்சாத தைரியம், தன் இருப்பு கைவிட்டுப் போகிறதோ என்கிற குழப்ப நிலை, தூய நரை பேசும் காதல் என நடிப்பில் நவரசக் கோலத்தைப் பச்சை குத்திச் செல்கிறார் கீதா கைலாசம்.

பற்றவைத்த சுருட்டின் நெருப்பாகப் பேச்சில் சுடுபவர், அகம் சார்ந்த உணர்வுகளைச் சாம்பல் நிறப் புகையாகத் தேவையான குழப்பத்தோடு நடிப்பில் ஊதித் தள்ளுகிறார்.

எந்த இடத்திலும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே வராத அவரது நடிப்புக்கு உச்சாணிப்பூவைக் கொடுத்துவிடலாம்.

‘அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்கிற மனப்போராட்டத்துடன், தனது எண்ணங்களைத் தாயாரிடம் திணிக்கும் மகனாகத் தனது நடிப்பினால் நியாயம் செய்து வெறுப்பினைச் சம்பாதித்துக்கொள்கிறார் சரண்.

பாரபட்சம் காட்டும் தாயாரின் ஓரவஞ்சனையை உடைத்துப் பேசுமிடத்தில் நம் பரிதாபத்தைச் சம்பாதிக்கும் பரணிக்கு பெயர் சொல்லும் கதாபாத்திரம்!

ஆதிக்கத்துக்குள் ஆதிக்கம் என்பதாக அத்தையின் அதட்டலுக்கு நடுங்குகிற பெண்ணாக வரும் தென்றல் ரகுநாதனும், அதற்கு அப்படியே எதிர்த்துருவமாக காதலனின் பாதுகாப்பின்மையைக் கேள்வி கேட்கும் யுவதியாக முல்லையரசியும் மனதைக் கவர்கிறார்கள்.

அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review
அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review

ஓரக்கண்ணில் ரகசியப் பார்வையுடன் ‘அன்பிற்கு வயதில்லை’ என்பதாக மனதைக் கவரும் வினோத் ஆனந்த், பாட்டியின் மடிசாயும் அன்பு பேத்தி யாஸ்மின், துணைக் கதாபாத்திரங்களாக வரும் செல்வி, யுவராணி ஆகிய அனைவரும் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சாந்தமான நீலநிற ஒளியுணர்வோடு மலையடிவாரத்தின் எழில் கொஞ்சும் பசுமை, இரவின் நிழல் பேசும் மெர்குரி வெளிச்சம் எனத் தெளிந்த நீரோடையில் தெரியும் கூழாங்கற்களைப் போல கவித்துவமான ஃப்ரேம்களை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேல்.

மேற்பூச்சு இல்லாத பிரதீப் சங்கரின் படத்தொகுப்பு நல்லதொரு திரைமொழி!

டிவிஎஸ் சேம்ப்பில் இருக்கும் கறுப்பு நம்பர் பிளேட், வாக்மேன் கேசட், மண்ணெண்ணெய் விளக்கு, தியேட்டர் போஸ்டர், வெள்ளைத் துணி பேனர் ஆகிய பொருட்களின் மூலம் கதை நடக்கும் காலத்தை காட்சிகளில் சொல்ல உதவியிருக்கிறார் கலை இயக்குநர் கோபி கருணாநிதி.

அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review
அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review

‘உச்சிமலை காற்றே’ என்று ஆரம்பத்தில் தென்றலாக வருடும் தாலாட்டு போன்ற பாடல், இறுதிக்காட்சி நெருங்க, நெருங்க நிறம் மாறி, அதுவே நம்மைச் சுழன்றடிப்பது போலப் பார்த்துக் கொள்கிறார் இசையமைப்பாளர் முகமது மக்புல் மன்சூர்.

மௌனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பின்னணி இசையுடன், திரைக்கதைக்கு ஒத்து ஊதும் நாதஸ்வர இசையும் படத்துக்கு வலுசேர்க்கிறது.

அதேபோல ‘ஊ…’ என அடித்து வீசும் பேய்க்காற்றின் சத்தம், பல்லி கத்தும் இடம், தீ பற்றி எரிவது, சலசலக்கும் ஓடை என உருவமில்லா கதைசொல்லியாக ஒலியை வடிவமைத்திருக்கிறார் லெனின் வளப்பாட்.

பழங்கால ஆடைகளின் பேட்டர்ன், கதையின் மையமாக இருக்கும் வாயால் புடவை, ரவிக்கை, மேக்கப்பில் இயல்பாகத் தெரியும் பல்லின் கறை என அனைத்து துறைகளிலும் எடுத்திருக்கும் சிரத்தை படத்தில் பிரதிபலிக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி, திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்.

‘ரவிக்கை சட்டை அணிய மறுக்கும் தாயார்’ என்கிற மெல்லிய கருவில், கிராமத்தின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைக்கதை. 

அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review
அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review

எடுத்த எடுப்பிலேயே ‘ரவிக்கை’தான் பிரச்னை என்று சொல்லிவிட்டாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டு கதையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது.

பால்குடி மறக்க வைக்கும் அம்மா தொடங்கி, சேலை மறைவில் இறுதிச் சடங்கு நடைபெறும் பாட்டி வரையிலும் பெண்ணின் உடல் சார்ந்த உரையாடல்களை நிறுத்தாமல் நகர்த்திச் செல்கிறது படத்தின் ஸ்டேஜிங்.

ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மற்றவர்களுக்காக அலைக்கழிக்கும் வாழ்வின் மீது கேள்வி எழுப்பிய விதம் அட்டகாசம்!

தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட மகனாக பரணி உடையும் இடம்... அப்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் கறுப்பு - வெள்ளைப் பக்கங்கள் வெளியாவதைப் படமாக்கிய விதம் போன்றவற்றால் உச்சம் தொடுகிறது மேக்கிங்!

மூன்று தலைமுறை பெண்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை ஆண் ஆதிக்கம், பாசம், காதல் ஆகிய நுண்ணிய உணர்வுகளால் நிரப்பி அதை உரையாடலுக்கும் உட்படுத்துகிறது எழுத்து.

அதோடு பின்காலனியம், உலகமயமாக்கல் ஆகியவற்றைத் தாண்டி ‘விருப்பம், தேர்வு’ என்ற புள்ளியில் பிடிவாதமாக நிற்கிற பெண்ணின் குணத்தைக் கச்சிதமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைமொழி.

அதேபோல ‘உச்சிமலை காற்று - காணாமல் போகும் மனிதர்கள்’ என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாய்மொழிக் கதையை க்ளைமாக்ஸில் இணைத்த விதமும் அழகு!

இருப்பினும் ஒரு புள்ளியில் முடிந்துவிட்ட இறுதிக் காட்சியை இத்தனை நீட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வியும், வட்டார வழக்கில் ஆங்காங்கே ஏற்படும் குழப்பங்களும் படத்தின் தன்மையைச் சிதைக்கின்றன.

அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review
அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review

புதுமையான திரைமொழி என்றாலும், தொடக்கமும் முடிவும் இல்லாத சில காட்சியமைப்புகள், முக்கியமான தருணங்களைச் சொல்லவரும் காட்சிகளை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்யாதது போன்றவை ஏமாற்றமே!

குறைகள் இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதையாகவும் நல்ல தரத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘அங்கம்மாள்’, நம் கலை ரசனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கியப் படைப்பாக மனதில் வந்து அமர்கிறாள்.

AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான்" - கமல் இரங்கல்

தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார்.ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ... மேலும் பார்க்க

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்... மேலும் பார்க்க

AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே க... மேலும் பார்க்க