``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மா...
பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி சிந்த கனவாய் வனப்பகுதியிலுள்ள மூன்று புளியமரம் என்று அழைக்கப்படும் வன ஓடையில் 6 வயதான ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்தம் வழிந்தோடியபடி இறந்து கிடந்தது.
`அடுத்தடுத்து இந்த யானைகள் உயிரிழந்தது எப்படி?’ என்பதற்கான விடைத் தெரியாத நிலையில், பேரணாம்பட்டு அருகே சாத்கர் மலைப் பகுதி ஏரி தண்ணீரில் ஒரு யானையின் உடலும், அதன் அருகிலுள்ள பாறைமீது மேலும் 2 யானைகளின் உடல்களும் மிகஅழுகிய நிலையில் கிடப்பதாக நேற்றைய தினம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றது. வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துசென்று பார்த்தபோது, 3 யானைகளும் இறந்து நீண்ட நாள்களானது தெரியவந்தது.

ஏரியில் கிடந்த யானையின் உடலமைப்பை ஆய்வு செய்தபோது, சுமார் 2-ல் இருந்து 3 வயதே ஆன குட்டி யானை எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஏரிக்கரை அருகில் கிடந்த 2 யானைகளும் 5-ல் இருந்து 7 வயதுக்குஉட்பட்டவை எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, யானைகளின் உடல்களை கூராய்வு பரிசோதனை செய்வதற்காக 5-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களைக்கொண்ட சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குழுவினர் இன்று உடற்கூராய்வு பரிசோதனையில் ஈடுபடுகின்றனர். உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, யானைகள் தொடர் உயிரிழப்புக்கான காரணத்தையும் அறிய முடியும். அதே நேரத்தில், `சமூகவிரோத கும்பல்களின் சதி வேலைகளால் யானைகள் இறந்திருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடங்களில், தடயவியல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டு வருகின்றன.



















