`பைலட் பணி நேரம் குறைப்பு' - அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து - ...
`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
கடந்த 33 ஆண்டுகளாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை, அண்மையில் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரிச் (Value-added Tax - VAT) சட்டத்தின் கீழ், வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் பாலியல் நோய்கள்
சீன அரசு 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தபோது இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தற்போது ஒரு ஆணுறை $0.60 (இந்திய மதிப்பில் சுமார் 50 ரூபாய்) என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் சில்லறை விலையில் பாதியாகும். ஆனால் வரி விதிப்புக்குப்பிறகு இந்த நிலை எப்படியாக மாறும் எனக் கூற முடியாது. தற்போதைய தகவல்கள் படி 13% வரிவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு பின்னடைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இது பாலின சமத்துவத்தைப் புறக்கணிப்பதோடு, கருத்தடை மிகவும் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை மேலும் கடினமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
"பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு கருத்தடைப் பொருட்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நாடுகள் இளைஞர்களுக்கு ஆணுறைகளை இலவசமாகக் கூட கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்துள்ளன. ஆனால், இதற்கு வரி விதிப்பது, ஆணுறை கிடைப்பதை தடுப்பதோடு, நோய்த்தொற்று தடுப்பு முயற்சிகளையும் பாதிக்கக்கூடும்" என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு, சீனாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பும், இறப்பு விகிதமும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்து வருவதைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

அரசின் மக்கள்தொகை கொள்கை மக்களைப் பற்றியது அல்ல
தற்போது பிறப்பு விகிதம், 'மக்கள்தொகைக் கட்டுப்பாடு' என்ற நிலையில் இருந்து 'கருவுறுதலை ஊக்குவித்தல்' என்ற நிலைக்கு சீனா மாறியுள்ளது. சீனாவின் கடுமையான 'ஒரு குழந்தை கொள்கை' ஒரு தசாப்தத்திற்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. 2016-ல் 'இரண்டு குழந்தை கொள்கை' எனவும், பின்னர் 2021-ல் 'மூன்று குழந்தை கொள்கை' என்றும் அது மாற்றப்பட்டது.
கருத்தடைப் பொருட்கள் வரி விலக்கை இழந்த நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இப்போது புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சீன அரசு ஊடகங்கள், பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றன. இது பெண்களின் கல்வி மற்றும் தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன.
இந்த புதிய வரி விதிப்பு ஒரு பொருளாதாரச் திருத்தம் மட்டுமல்ல, குடும்பம், திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை அரசு அணுகும் விதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் மாற்றம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக்கொண்டே பெற்றோருக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், வளாகத்தில் குழந்தைகளைப் பெறுவதன் சமூக நன்மைகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன.
"குறைந்த வயதிலேயே திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய அழுத்தம், எதிர்காலத்தில் பெண்களின் கல்வி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விகளை இது எழுப்புகிறது" என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறைந்த வயது பெற்றோர்களை உருவாக்குவது இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியாது எனக் கருதுகின்றனர்.
சீனாவின் மக்கள் தொகை கொள்கை ஒருபோதும் மக்களைப் பற்றியது அல்ல. ஆனால் இந்தமுறை சீன அரசின் செயல்பாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதை நோக்கி இருக்கிறதா அல்லது பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் 'வளமாக' மாற்றுகிறதா என்ற கேள்வி சீன இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

















