சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆ...
Indigo: ``மற்ற நிறுவனங்கள் பிரச்னையை சந்திக்கவில்லை; இண்டிகோ மட்டும் எப்படி?" - அமைச்சர் கேள்வி
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது.
இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, " நிலைமையை நாங்கள் முழுமையாக கண்காணித்து வருகிறோம், விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இந்த விதிமுறைகளில் உள்ள சிக்கல்களை எங்களிடம் கூற பல அமைப்புகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
அதனால்தான், இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விசாரிக்கவும், தவறு செய்தவர்களைக் கண்டறியவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப் போகிறோம்.

தற்போதைய சிக்கல்களுக்கு FDTL வழிகாட்டுதல்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால் மற்ற விமான நிறுவனங்களும் இதே விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
நாம் இப்போது பேசும் பிரச்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்பானது. எனவே தவறு இண்டிகோ நிறுவனத்திடம்தான் உள்ளது. மற்றபடி தவறு அமைச்சகத்தின் விதிமுறைகளில் அல்ல.
FDTL அல்லது அமைச்சகத்திடமிருந்து ஏதாவது பிரச்னை இருந்தால், அனைத்து விமான நிறுவனங்களும் பிரச்னைகளைச் சந்தித்திருக்க வேண்டும், ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சகத்தின் கவனம் பயணிகள்தான் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

அடுத்த முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை, எங்கள் பொறுப்பு. எனவே, விசாரணையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.













