நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி க...
மேயர் பதவி: ராஜ்தாக்கரே, சரத் பவாருடன் ஷிண்டே கூட்டணி - மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி எல்லைகள்!
மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு நகராட்சி துணைத்தலைவர், மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் மற்ற கட்சிகளின் கவுன்சிலர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. துணை தலைவர் பதவியை பிடிக்க ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க பெற்றது.
அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் திடீரென சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவில் சேர்ந்தனர்.
இப்போது இப்பிரச்னை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் மும்பை அருகில் உள்ள கல்யான் டோம்பிவலி மாநகராட்சியிலும் மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில் பா.ஜ.க 50 இடங்களிலும், சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் மேயர் பதவியை பிடிப்பதில் இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

சிவசேனாவுக்கு 5 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆதரவு கொடுத்து இருக்கிறது. இங்கு ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இப்போது திடீரென மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜ் தாக்கரேயின் அனுமதியை பெற்றுத்தான் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா முன்னாள் எம்.எல்.ஏ.ராஜு பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து கல்யான் சிவசேனா(உத்தவ்) தலைவர் சரத்பாட்டீல் அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா இங்கு 11 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்களில் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் நான்கு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே கட்சி அறிவித்துள்ளது. இது தவிர சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இங்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அந்த ஒரு உறுப்பினரும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.
இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. ஆனால் மேயர் பதவி இம்மாத இறுதியில்தான் நடக்கும். அதுவரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
இதே போன்று மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான உல்லாஸ் நகரிலும் மேயர் பதவியை பிடிப்பதற்கான 40 கவுன்சிலர்களின் ஆதரவை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா பெற்று இருக்கிறது. இங்கு சிவசேனா 36 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கல்யான் டோம்பிவலி மற்றும் உல்லாஸ் நகர் மேயர் பதவி குறித்து முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் மும்பை திரும்பியதும் முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மேயர் பதவியை பிடிக்க துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
ஒரே சின்னத்தில் அஜித்பவார், சரத்பவார் கட்சிகள் போட்டி
மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. !

















