வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!' - எழுத்தாளர் மகுடேஸ்வரன்
சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்... வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்தாளரும் மொழி அறிஞருருமான மகுடேஸ்வரன், பிற மொழி கலப்பில்லாமல் மொழியைக் கையாள வேண்டியதன் தேவை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
``மொழி என்பது தனித்து இயங்குவது. ஒவ்வொன்றும் ஒரு மொழி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு செரிமான அமைப்பு உள்ளது. மொழி என்பது பண்பாட்டுச் சொத்து. குறிப்பாக தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இதுவரை தனித்து நின்றே இவ்வளவு தூரம் பயணித்துள்ளது.

இதன் தனித்தன்மையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்வதுதான் உங்கள் கடமை. மொழியைக் கலப்பு செய்தோ, சிதைத்தோ பிற மொழிகளின் ஆதிக்கத்தை உள் இழுத்துக் கொண்டோ அடுத்த தலைமுறைக்கு இந்த மொழியை விட்டுச் செல்லலாமா? இது எப்படி ஓர் அறிவுடைமை ஆகும்? மொழியின் எல்லா நுண்ணியக்கூறுகளும் காப்பாற்றப்பட வேண்டிய உலகத்திற்குத்தான் நாம் செல்ல வேண்டும்.
தமிழர்களின் கடமை என்னவென்றால் அழகான, அரிதான, தனித்தன்மைமிக்க, காப்பாற்றப்பட வேண்டிய, எல்லா தொன்மைகளையும் நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். முன்பு தமிழ் மொழி வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியது. தற்போது தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பாக வாட்ஸ் அப்பில் தங்கிலீஷுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது.
எந்த நாட்டில் மொழிக் கலப்போடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்? ஜப்பானில் அவர்கள் ஜாப்பனீஷ் மொழியைக் காப்பாற்றுகிறார்கள். சீனாவில் சைனீஷைக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல தமிழையும், தமிழ் மொழியையும் யார் கையாள்கிறார்களோ, அவர்கள்தான் அந்த மொழியைக் காக்க வேண்டும். மொழிக் கலப்பு, மொழி சிதைவடைந்து அழிவுக்கு வித்திடும். இது அறிவுடையோர் செய்யும் காரியம் அல்ல.

இயற்கையைச் சுரண்டுபவர்களுக்கும் மொழிக் கலப்பைக் கையாளுபவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மொழியைக் கலப்பில்லாமல் இலக்கணக் கட்டமைப்போடு எழுத வேண்டும். அதற்கு அ.கி பரந்தாமனர் எழுதிய "நல்ல தமிழ் எழுத வேண்டுமா?"என்ற புத்தகம். பிறகு என்னுடைய "தமிழறிவோம்" நூல். இவை மிகவும் பயனுள்ள புத்தகங்கள். தேவநேயப் பாவனார் எழுதிய மொழி குறித்தான நூல்கள் பற்றிப் படிக்கலாம். இதில் அதிக அளவிலான மொழி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இவை மட்டும்தான் என்று இல்லை. மொழி எப்படி இயங்குகிறது என்பதைக் கண்டறிந்தால் பிழை இல்லாமல் எழுத முடியும். கலப்பில்லாத பிழையில்லாத மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்" என்றார் அழுத்தமாக.
















