குரு சுக்கிரன் சேர்க்கை - யாருக்கு யோகம்? | வார ராசிபலன் 17.5.26 முதல் 23.5.26 |...
மோடி பரிந்துரைத்த 'மீண்டும்' ஆன்லைன் க்ளாஸ்: கல்லூரி மாணவர்களுக்கு 'ஓகே'; ஆனா, பள்ளி மாணவர்களுக்கு?
இன்னும் கிட்டத்தட்ட 15 நாள்களில் பள்ளி, கல்லூரி ரீ-ஓபன் ஆகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு... இந்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கைகாட்டி இந்திய பிரதமர் மோடி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் க்ளாஸ் நடத்தலாம் என்று பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்தியா மட்டுமல்ல... உலகத்திற்கே ஆன்லைன் க்ளாஸ் புதிதல்ல. கொரோனா பேரிடர் நமக்கு அறிமுகப்படுத்திய விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஏற்கெனவே பழகியதாக இருந்தாலும், ஆன்லைன் க்ளாஸில் சில ப்ளஸ்களும் உண்டு... மைனஸ்களும் உண்டு.
ஆன்லைன் க்ளாஸ்களில் பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகிறார் சென்னை முகப்பேர் கிழக்கு அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார்.

"பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் க்ளாஸ்கள் பெரும் பிரச்னையாக இருக்காது. ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்ட்ராய்ட் போன் முதல் இன்டர்நெட் பேக் வரை அனைத்துமே சிரமம்.
சில மாணவர்களின் வீடுகள் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும். இந்தச் சூழலில், ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் மாணவர்களையும், இந்த மாணவர்களையும் ஒப்பிடுகையில், சமமான படிப்பு சென்று சேராது.
சில தனியார் பள்ளி மாணவர்கள் கூட இந்தப் பிரச்னையை சந்திப்பார்கள்.
இப்போது பிள்ளைகள் மொபைல் போன் அதிகம் பார்க்கிறார்கள் என்கிற புகார் அதிகம் வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில், ஆன்லைன் க்ளாஸிற்காக பிள்ளைகளின் கைகளுக்கு வந்த மொபைல் போன்களே, பிள்ளைகளுக்கு மொபைல் பழக்கத்தை அதிகப்படுத்தியது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.
மொபைல் போன் பயன்படுத்துவதால், பிள்ளைகளுக்கு கவன சிதறல் ஏற்படுகிறது.

ஆன்லைன் கேம்ஸ், மொபைல் போன் அடிக்ஷன் காரணமாக, குழந்தைகள் வெளியில் சென்று அதிகம் விளையாடுவதில்லை. சமூக நகர்வுகள் குறைந்திருக்கின்றன... நண்பர்களுடனான பழக்க வழக்கங்களும் குறைந்துவிட்டன.
இதில் ப்ளஸ்கள் என்ன என்று பார்த்தால், பிள்ளைகள் அலைவது குறையும். சீக்கிரம் எழுந்து டிபன் ரெடி செய்வது, பிள்ளைகளை கிளப்பிவிடுவது போன்ற சிரமங்கள் பெற்றோர்களுக்கு குறையும்.
ஆனால், இரண்டு பெற்றோர்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், அவர்கள் வேலைக்கு சென்றப்பின், பிள்ளைகளை யார் கவனிப்பார்கள்... அவர்களுடைய ஸ்கிரீன் டைமை யார் மானிட்டர் செய்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறி.
வகுப்பறையில் யார் கவனிக்கிறார்கள்.... யார் என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாக ஆசிரியர்களால் கண்காணிக்க முடியும். ஆனால், ஆன்லைன் கிளாஸில் இதற்கு வாய்ப்பு இல்லை.
மாணவர்களுக்கு தெளிவாக புரிகிறதா, சந்தேகம் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் ஆன்லைன் க்ளாஸ்களில் தெரிந்துகொள்ள முடியாது.
ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கும், மாணவர்களுக்குமான கனெக்ட் இருக்காது. யார் அவர்களது மாணவர்கள்... யார் எப்படி என்பதே ஆசிரியர்களுக்கு தெரியாது.
கொஞ்சம் வயதான ஆசிரியர்கள் என்றால், அவர்கள் தொழில்நுட்பத்தை விரைவில் பழகுவது கஷ்டம்".

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் க்ளாஸினால் ப்ளஸா... மைனஸா என்பதை கூறுகிறார் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் அ.விமலா.
"தற்போது பிரதமர் மோடி கூறியிருக்கும் ஆன்லைன் க்ளாஸ் தற்காலிகமானது தானே. அதனால், கல்லூரி மாணவர்களுக்கு தாராளமாக ஆன்லைன் க்ளாஸை பரிந்துரைக்கலாம்.
கொரோனா பேரிடர் காலத்தில் தான் ஆன்லைன் க்ளாஸை புதிதாக பழகுவது சிரமமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. அனைவருமே ஆன்லைன் க்ளாஸிற்கு பழகிவிட்டோம். இப்போது பி.எச்.டி Viva Voce, செமினர் போன்றவை ஆன்லைனில் தான் நடக்கின்றன.
மேலும், அனைத்து கல்லூரி மாணவர்களிடமும் இப்போது மொபைல் போன் உள்ளது. அதனால், கல்லூரி மாணவர்களுக்கு அதிக சிரமமாக இருக்காது.
முழு வீச்சில் ஆன்லைன் க்ளாஸ் இல்லாமல், வாரத்திற்கு 2-3 நாள்கள் ஆன்லைன் க்ளாஸ் இருந்தால், ஆசிரியர் - மாணவர் கனெக்ஷன், சமூக உறவு போன்றவை அப்படியே தொடரும்.
ஆன்லைன் க்ளாஸில் தியரியை சொல்லிக்கொடுத்துவிட்டு, வகுப்பறையில் பிராக்டிக்கல் கல்வியைக் கற்றுத் தரலாம்.

பத்தாம் வகுப்பு, +1,+2 மாணவர்களுக்கு வேண்டுமானாலும் ஆன்லைன் க்ளாஸ் கொண்டுவராமல் இருக்கலாம்.
உலகம் இப்போது சென்றுகொண்டிருக்கும் வேகத்திற்கு, ஆன்லைன் க்ளாஸை மாணவர்கள் பழகுவது நல்லது தான். இந்த ஒரு பழக்கத்தால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கூட ஆன்லைனில் படிக்கலாம்".



















