செய்திகள் :

'யாராவது ‘இது உன் நல்லதுக்குத்தான்’ என சொன்னால் எரிச்சலா வருது' - பெண்ணின் `பேசும் மனசும் தீர்வும்'

post image

“எனக்கு 26 வயசு. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நல்ல வேலை, பிரச்னை இல்லாத குடும்பம், போதுமான வருமானம்... வெளியிலிருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் வாழ்க்கை சரியாக இருப்பது போன்றுதான் தோன்றும். ஆனால், 'எல்லா இடங்களிலும் நான் மற்றவர்களுடன் ஒப்பிடப்படுகிறேன் என்ற உணர்வு' சமீபகாலமாக என் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இது எனக்கு எரிச்சல் உணர்வைத் தருகிறது.

love
self love

சின்ன வயதில் இருந்தே நிறைய ஒப்பீடுகளைக் கடந்துதான் வந்திருக்கேன். எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில் இருந்த கவிதா ,பத்தாம் வகுப்பில் முதல் இடம் வாங்கினாள்...‘நீயும் அவளை மாதிரி படிக்கலாம்ல?’ என்று என்னிடம் சொன்னார்கள்....

என் தம்பி எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பான்...
‘அவனை மாதிரி நீயும் இரு’ னு அறிவுரை வழங்கினார்கள்...


அடுத்த தெரு ரமேஷ் ஓட்டப் போட்டியில் பதக்கம் வாங்கினான்...
‘பிள்ளைகள் எவ்வளவோ சாதிக்கிறாங்க… நீயும் முயற்சி பண்ணு’ என்று அறிவுறுத்தினார்கள். இன்னும் இது போன்று ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இது எல்லாமே ஆரம்பத்தில் என்னை ஊக்குவிக்கும் விதமாகத்தான் இருந்தது. நானும் புதுப்புது முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அதே வார்த்தைகள் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் தொடரும்போது, எனக்கு என் மீதே சந்தேகம் வர ஆரம்பித்தது. நான் எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று தோன்ற ஆரம்பித்தது. தாழ்வு மனப்பான்மை வந்தது.

இது குடும்பத்தில் மட்டும் இல்ல. நட்பு வட்டாரத்திலும் தொடர்ந்தது. அலுவலகத்திலும் இதே நிலை.‘அவரைப் போல அவுட் புட் கொடுக்கணும்’, 'அவங்களை மாதிரி திறமைகளை வளர்த்துக்கணும்'என்று சிலர் என்னிடம் சொல்வார்கள். தொடக்கத்தில் இந்த கமென்ட்களை என் வளர்ச்சிக்கான ஃபீட்பேக்குனு நினைத்தேன். ஆனால், காலப்போக்கில் அது எனக்கு அழுத்தமாக மாற ஆரம்பித்தது.

ஒப்பீடுகள் மெதுவாக என்னை பாதிக்க ஆரம்பித்தது. நான் சாதனையே பண்ணாலும் கூட, என்னால அதை கொண்டாட முடியவில்லை. இப்போது யாருடைய சாதனையுடன் ஒப்பீடுவாங்களோ? என்று தான் முதலில் தோன்றுகிறது. சில நேரங்களில் என்னையே நான் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நான் இன்னும் பெட்டரா இருக்கணுமா? எதையும் மிஸ் பண்ணுறேனா? இந்த மாதிரியான எண்ணங்கள் மேலோங்குகின்றன. ஒரு கட்டத்தில், நான் என்னை மேம்படுத்திக்கொள்ள நினைக்காமல்…யாருடனான ஒப்பீட்டிலும் தோற்க கூடாது என்று வாழ ஆரம்பித்துவிட்டேன் . இது என் மனதை சோர்வடையச் செய்தது.

Office (Representational Image)

சிறிய விஷயத்தைக் கூட சரியாகச் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோட என்னால இருக்க முடியவில்லை. எல்லா இடத்திலேயும் சுய சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் நான் என் அடையாளத்தை தொலைத்துவிட்டு அடுத்தவர்கள் போல், மாற ஆரம்பித்திருக்கிறேன். யாரையோ ஜெயிக்க வேண்டும் என்று, எனக்கு பிடிக்காத விஷயங்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறேன். நான் என்ன விரும்புகிறேன், எனக்கு என்ன வேண்டும் என்பது கூட எனக்குத் தெளிவாக தெரியவில்லை...ஏன் என்றால் நான் எப்போதும் யாரோ இன்னொருவரின் வெர்ஷனாகத்தான் இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.

இப்போது யாராவது, ‘இது உன் நல்லதுக்குத்தான்’ என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வருகிறது. எனக்கு என் வாழ்க்கையில் முடிவு எடுக்க தெரியவில்லையா?',  'நான் நானாக இருப்பதில் மற்றவர்களுக்கு ஒத்துப்போவதில்லையா?', 'என்னை யாருக்கும் பிடிக்கவில்லையா?', 'நான் நானாக இருந்தால் போதாதா?', 'எப்போதும் யாருடைய மாதிரியாகத்தான் இருக்க வேண்டுமா?' இந்தக் கேள்விகளுடன் தான் நான் தினமும் வாழ்றேன்…என்று வாசகி ஒருவர், தீர்வு கேட்டு விகடனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து உளவியல் ஆலோசகர் ஃப்ரீனுவிடம் பேசினோம்...

பொதுவான ஒரு உளவியல் நிலை

"இந்த அனுபவம் தனிப்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் இது பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு உளவியல் நிலை. சின்ன வயதிலிருந்து தொடர்ந்து ஒப்பீடுகளுக்குள் வளரும்போது, மனதில் நம்பிக்கையின்மை உருவாகும். மற்றவர்களின் ஒப்பீட்டில்தான் என் மதிப்பு இருக்கிறது என்ற எண்ணம் தோன்றும்.

இது மெதுவாக ஒருவரின் சுயமதிப்பை வெளியே தள்ளிவிடும். 'என்ன சாதித்தாலும் 'அது போதாது என்ற உணர்வு உருவாகும். அடுத்தவர்களை விட சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம், நம்முடைய வாழ்க்கையை ஒரு போட்டியாக மாற்றிவிடும்.

ஒவ்வொரு முடிவுக்கும் முன்னால், 'இது சரியா?' 'அவரைப் போல இல்லையே?' என்ற எண்ணமும், சந்தேகமும் வரும். இதனால் நம்பிக்கை குறையும். தெளிவு மங்கும். ஒரு கட்டத்தில், முடிவு எடுக்கவே பயம் வர ஆரம்பிக்கும்.

ப்ரீனு

 விருப்பங்கள், அவர்களின் முடிவுகள், அவர்களின் அடையாளம் இவை எல்லாம் மெதுவாக மறைந்து போக ஆரம்பிக்கும். 'நான் யார்?' என்ற கேள்விக்கே பதில் சொல்ல முடியாத நிலை உருவாகும். அப்படியானால், இதிலிருந்து வெளியே வர என்ன செய்யலாம்?

தீர்வு:


முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒப்பீடு என்பது தவறு அல்ல. அது முன்னேற்றத்திற்கும் உதவலாம். ஆனால், அது நம்முடைய மதிப்பை நிர்ணயிக்க ஆரம்பித்துவிட்டால், அங்கேயே ஒரு எல்லை உருவாக்க வேண்டும்.

மாற்றம் வெளியில் இருந்து வராது… அது உங்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்பது முக்கியம். 'நான் இப்போது யாருடன் என்னை ஒப்பீடு செய்கிறேன்?' என்று கேட்க ஆரம்பித்தாலே, ஒரு விழிப்புணர்வு உருவாகும். அந்த விழிப்புணர்வே மாற்றத்தின் முதல் படி.

அடுத்தது, தனிப்பட்ட அடையாளத்தை மீண்டும் உருவாக்குவது. 'எனக்கு என்ன பிடிக்கும்?', 'என்ன மாதிரியான வாழ்க்கை நான் வாழ வேண்டும்?' என்ற கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்க வேண்டும். மற்றவர்களின் அளவுகோலை வைத்து நம்மை அளக்காமல், நம்முடைய அளவுகோலை உருவாக்க வேண்டும்.

சிறிய சாதனைகளைக் கூட கவனித்து கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நேற்று இருந்த நம்முடன் இன்று இருக்கும் நம்மை ஒப்பிட ஆரம்பித்தால், நம்பிக்கை மெதுவாக திரும்பும்.

Women (Representational Image)

மற்றவர்களைப் பார்த்து, 'அவரைப் போல ஆக வேண்டும்' என்பதற்குப் பதிலாக, அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? என்று மாற்றிக் கொள்ளலாம். இந்த ஒரு மாற்றமே ஒப்பீட்டை அழுத்தத்திலிருந்து வளர்ச்சியாக மாற்றும்.

எப்போதும் நீங்கள் யாருடைய பெட்டட் வெர்ஷனாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் ஒரிஜினல் வெர்ஷனாக இருந்தாலே போதும். மற்றவர்களின் வேகத்திற்கு ஓட வேண்டிய அவசியமில்லை. உங்களின் வேகத்திற்கு ஏற்ப வெற்றிக் கோட்டை உருவாக்குங்கள்" என்று விரிவாக விளக்கினார். 

தொடர்ந்து பேசுவோம்!

வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே...

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ' பேசும் மனது' என Subject - ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!

“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” - பேசும் மனசு - 7

“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்... மேலும் பார்க்க

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? - இது தெரியாமப் போச்சே?! - 22

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்' என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க க... மேலும் பார்க்க

Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது | Photo Album

புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது.வலைகளை சீரமைக்கும் மீனவர்வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்படகு எஞ்சின் பழுது நீக்கம்படகு முழுமையாக பழுதுபார்க்க கரையில் ஏற்றும் பணிவலைகளை சீரம... மேலும் பார்க்க

"பூனைக்குட்டிகளுக்கு `தந்தை' யார்?" - பூனைகளின் காதல் பஞ்சாயத்தும் போலீஸின் அதிரடி தீர்ப்பும்!

பொதுவாக விவாகரத்து அல்லது குடும்பத் தகராறுகளில் `குழந்தை பராமரிப்புச் செலவு' கேட்டு நீதிமன்றம் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் ஒரு படி மேலே போய், "உன் பூனைதான் என் பூனையைக் கர்ப்பமாக்... மேலும் பார்க்க

“எல்லாருக்கும் ‘Yes’ சொன்னேன்… ஆனா என் வாழ்க்கை இப்போ ‘No’ சொல்ல ஆரம்பிச்சுடுச்சு”- பேசும் மனசு - 6

“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, நான் எப்போதும் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் வேலை செய்து வருகிறேன். யாராவது உதவி கேட்டால்,... மேலும் பார்க்க