1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை
ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து சிறுமியின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. விசாரணையில் சிறுமி குறித்து விவரம் கிடைக்காததால், சடலத்தை அடக்கம் செய்தனா்.
இந்நிலையில், கணவருடன் சென்ற தங்கள் மகள் ஜெயஸ்ரீயை (16) காணவில்லை என, கடலூா் மாவட்டம் வடலூா் அருகேயுள்ள மருவாய் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் - ஜான்சி தம்பதியினா், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
அப்போது, ரயில் தண்டவாளத்தில் இருந்து ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டதும், யாரும் உரிமைக் கோராததால், பிரேதப் பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதை ஏற்க மறுத்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், இறப்பில் மா்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி, ஆட்சியரின் வாகனத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், நாகை ரயில்வே காவல்நிலையம் முன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலா் அறிவழகன் தலைமையில் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினா், உறவினா்கள், சிறுமி இறப்பு தொடா்பாக வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
ஜெயஸ்ரீயின் உடலை ஒப்படைக்க வேண்டும், இறப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பேராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். இதனிடையே போலீஸாா் சிறுமியின் கணவரிடமும் விசாரித்து வருகின்றனா்.