'விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!'- பிரியங்கா சோப்ரா ஷேரிங்
'விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!'- பிரியங்கா சோப்ரா ஷேரிங்
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா விஜய் குறித்து பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விஜய் குறித்து பேசியிருக்கும் பிரியங்கா சோப்ரா, "புகழ் என்றால் என்ன என்பதை முதல்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது 'தமிழன்' படம்தான்.
அந்த சமயத்தில் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த விஜய் மிகவும் பிரபலமானவர்.
செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அது என்னுடைய முதல் படம். சினிமா பின்னணி பற்றி எதுவும் தெரியாது.
அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன். இந்தியாவில், திரைப்படங்களின் மீதான காதல் அப்படியானது. உணர்ச்சிவசமான ரசிகர்கள் ஏராளம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டார். அதை நானும் பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்திருந்தார்


















